மிருகங்களை போல நடத்தப்பட்ட கைதிகள் – கொரோனா கட்டுப்பாடுகளை கண்டுகொள்ளாத மத்திய அமெரிக்க அரசாங்கம்
28 Apr,2020
மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடோரில் சிறைக்கைதிகள் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டமை சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.
உலகெங்கும் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலால் அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகளின் தனிமனித மற்றும் பொருளாதார இருப்பை கேள்விக்குள்ளாக்கி வரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உலக சுகாதார ஸ்தாபனம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் தனிமனித இடைவெளியினை பேணுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய அமெரிக்க நாடான எல் சல்வடோரில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் உள்ள சிறைக்கைதிகள் கொரோனா கட்டுப்பாடுகளை மீறி நெருக்கமாக அமரவைத்துள்ளமையானது சர்வதேச ரீதியாக பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாரத்தின் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் குறித்த சிறைக்கைதிகளின் சிறைக்கூடங்களில் தேடுதலைகளை நடத்தும் பொருட்டு குறித்த சிறைக்கூடங்களில் இருந்த கைதிகள் இவ்வாறு அமர வைக்கப்பட்டுள்ளனர்.
அண்மைக்காலமாக எல் சல்வடோரில் 20க்கும் மேற்பட்ட கொலைகள் நடைபெற்றுள்ள நிலையில், சிறைக்கைதிகளாக உள்ள குழுத்தலைவர்களே குறித்த கொலைகளுக்கான உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக அந்நாட்டின் உளவுத்துறை தகவல் வழங்கியுள்ளது.
இதனைத்தொடர்ந்து அந்நாட்டு ஜனாதிபதி நயீப் புக்கெல்லே’யினால் (Nayib Bukele) குறித்த நடவடிக்கைக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியிலேயே அதிக சிறை கைதிகள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அங்கி இதுவரையான காலப்பகுதியில், 300 பேருக்கு கொரோனா வைரஸ் தோற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.