ஐரோப்பிய நாடுகளில் ஆறுதலளிக்கும் செய்தி!
28 Apr,2020
கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலகின் 200இற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள நிலையில் இதுவரை 30 இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
வைரஸ் பரவலால் பல்லாயிரக்கணக்கில் மனித இழப்பை எதிர்கொண்டுள்ள அமெரிக்காவில் தொற்றுக்குள்ளானவர்கள் 10 இலட்சத்தைக் கடந்துள்ளதுடன் உயிரிழப்புக்கள் 55 ஆயிரத்தைக் கடந்துள்ளன.
இதேவேளை, நேற்று உலகம் முழுவதும் 69 ஆயிரத்து 213 பேர் புதிய நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக 30 இலட்சத்து 64 ஆயிரத்து 863பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், நேற்று மட்டும் உலக நாடுகளில் 4 ஆயிரத்து 532 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த உயிரிழப்புக்கள் 2 இலட்சத்து 11 ஆயிரத்து 609 ஆக அதிகரித்துள்ளதன.
மேலும், தொற்று உறுதிசெய்யப்பட்ட 30 இலட்சம் பேரில் 9 இலட்சத்து 22 ஆயிரத்து 408 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்காவில் 56 இலட்சத்து 96 ஆயிரத்து 928 பேரிடம் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 10 இலட்சத்து 10 ஆயிரத்து 356 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 23 ஆயிரத்து 196 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
அந்நாட்டில் நேற்று மட்டும் ஆயிரத்து 384 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 56 ஆயிரத்து 797ஆக அதிகரித்துள்ளது. அதிக உயிரிழப்புக்கள் பதிவான ஏனைய நாடுகளைவிட அமெரிக்காவில் மரணங்கள் இரட்டிப்பாகக் காணப்படுகின்றன.
இதேவேளை, ஐரோப்பிய நாடுகளில் பெரும் மனித இழப்பை ஏற்படுத்திவருகின்ற வைரஸ் தொற்றினால் கடந்த இரு நாட்களாக உயிரிழப்புக்கள் குறைந்துள்ளன. அந்நாடுகளில் நேற்று ஒரேநாளில் 2 ஆயிரத்து 112 பேர் மரணித்துள்ளனர். அத்துடன் குறித்த நாடுகளில் மொத்தமாக ஒரு இலட்சத்து 23 ஆயிரத்து 997 பேர் இதுவரை மரணித்துள்ளனர்.
மேலும், நேற்று 24 ஆயிரத்து 463 பேருக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் மொத்தமாக 13 இலட்சத்து ஆயிரத்து 271 பேருக்கு இதுவரை வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஐரோப்பிய நாடுகளில் பாதிக்கப்பட்ட 13 இலட்சம் பேரில் நான்கரை இலட்சம் பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
இதன்படி, கடுமையான பாதிப்புக்கு இலக்காகியுள்ள இத்தாலியில் நேற்று 333 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் மொத்த மரணங்கள் 26 ஆயிரத்து 977 ஆக அதிகரித்துள்ளன. அமெரிக்காவை அடுத்து அதிக உயிரிழப்புக்கள் ஏற்பட்ட நாடாகவுள்ள இத்தாலியில் மொத்த பாதிப்பு இதுவரை ஒரு இலட்சத்து 99 ஆயிரத்து 414 ஆகப் பதிவாகியுள்ளது.
இதனைவிட, ஸ்பெயினில் நேற்று மட்டும் 331 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 23 ஆயிரத்து 521 ஆகப் பதிவாகியுள்ளன.
மேலும், அங்கு 2 இலட்சத்து 29 ஆயிரத்து 422 பேருக்கு வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் ஒரு இலட்சத்து 20 ஆயிரத்து 832 பேர் குணமடைந்துள்ளனர்.
இதேவேளை, கடந்த சில நாட்களாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் ஏற்பட்டுவந்த பிரான்ஸிலும் மரணங்கள் குறைந்துள்ளன. அந்நாட்டில் நேற்று 437 பேர் உயிரிழந்துள்ளதுடன் மொத்த உயிரிழப்பு 23 ஆயிரத்து 293 ஆக அதிகரித்துள்ளது..
அந்நாட்டில் நேற்று புதிய தொற்றாளர்கள் 3 ஆயிரத்து 742 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்து 65 ஆயிரத்து 842ஆக அதிகரித்துள்ளது.
இதனைவிட மிக மோசமான உயிரிழப்பை எதிர்கொண்ட பிரித்தானியாவிலும் கடந்த இரு நாட்களாக உயிரிழப்புக்கள் கணிசமாகக் குறைத்துள்ளதுடன் நேற்று 360 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளன. அங்கு 21 ஆயிரத்து 92 பேர் இதுவரை மரணித்துள்ள நிலையில் மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்து 57 ஆயிரத்து 149 பேராகப் பதிவாகியுள்ளது.
மேலும், ஜேர்மனியில் இதுவரை ஒரு இலட்சத்து 58 ஆயிரத்து 758 பேர் தொற்றுக்குள்ளானமை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 500பேர் குணமடைந்துள்ளனர்.
உயிரிழப்புக்கள் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்ட நாடாக உள்ள ஜேர்மனியில் நேற்று 150 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த உயிரிழப்புக்கள் 6 ஆயிரத்து 126ஆகக் காணப்படுகின்றது.
மற்றொரு ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் நேற்று 113 பேர் மரணித்துள்ளதுடன் அங்கு மொத்த மரணங்கள் 7 ஆயிரத்து 207 ஆக அதிகரித்துள்ளன. அங்கு 46 ஆயிரத்து 687 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனைவிட, நெதர்லாந்தில் நேற்று மட்டும் 43 பேர் மரணித்துள்ளதுடன் அங்கு மொத்த உயிரிழப்புக்கள் 4 ஆயிரத்து 518 ஆக அதிகரித்துள்ளன.
இதையடுத்து, ரஷ்யாவில் தற்போது பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன் நேற்று மட்டும் அங்கு 6 ஆயிரத்து 198 பேர் புதிய நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
அங்கு 87 ஆயிரத்து 147 பேருக்கு இதுவரை தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டில் நேற்று 47 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 794 ஆக அதிகரித்துள்ளன.
இதனைவிட, தென் அமெரிக்க நாடான பிரேஸிலில் கடந்த நாட்களில் அதிக உயிரிழப்புக்கள் பதிவாகிவரும் நிலையில் நேற்றும் 272 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு மொத்த உயிரிழப்புக்கள் 4 ஆயிரத்து 543 ஆக அதிகரித்துள்ளதுடன் மொத்த பாதிப்பு 66 ஆயிரமாகக் காணப்படுகிறது.
இதையடுத்து, மற்றொரு அமெரிக்க நாடான கனடாவில் நேற்றுமட்டும் 147 பேர் மரணித்துள்ள நிலையில் மொத்த மரணங்கள் 2 ஆயிரத்து 707 ஆக அதிகரித்துள்ளன.
இதேவேளை, ஆசிய நாடுகளில் நேற்று 345 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் அதில் துருக்கியில் 95 பேரும் ஈரானில் 96 பேரும் அதிகபட்சமாக உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய சீனாவில் நேற்று 3 பேருக்கு மட்டுமே வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுள்ளதுடன் ஒரு வாரத்திற்குப் பின்னர் ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ளது.