கிம் ஜாங் அன் உடல்நிலை கவலைக்கிடம் என தகவல்: வடகொரியாவுக்கு மருத்துவ குழுவை அனுப்பியது சீனா
26 Apr,2020
உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரசை எதிர்த்து போராடி வரும் நிலையில், வடகொரியா எந்த கவலையும் இன்றி தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது. மேலும் தங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என வடகொரியா கூறியது.
இந்த நிலையில் வட கொரியா தலைவர் கிம் ஜாங் அன் சமீப நாட்களாக வெளி உலகிற்கு வரவில்லை. கடந்த 15-ந்தேதி நடைபெற்ற வடகொரியாவின் நிறுவனரும், தனது தாத்தாவுமான கிம் இல் சுங்கின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கிம் ஜாங் அன் கலந்து கொள்ளவில்லை. கடந்த 2011-ம் ஆண்டு தலைவராக வந்தபின் முதல் முறையாக இந்த நிகழ்ச்சியை கிம் ஜாங் அன் தவிர்த்ததால் இது பல சந்தேகங்களை எழுப்பியது. இதனிடையே சமீபத்தில் கிம் ஜாங் அன்னுக்கு நடந்த இதய அறுவை சிகிச்சைக்கு பின்னர் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பிரபல அமெரிக்க செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அமெரிக்க உளவுத்துறையும் இதை தீவிரமாக கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் கிம் ஜாங் அன்னுக்கு உடல் நிலை சார்ந்த ஆலோசனைகளை வழங்குவதற்காக நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழுவை சீனா, வடகொரியாவுக்கு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீன வெளியுறவு துறையின் மூத்த உறுப்பினர் தலைமையிலான தூதுக்குழு நேற்று முன்தினம் பீஜிங்கில் இருந்து வட கொரியாவுக்கு புறப்பட்டதாக வடகொரியா விவகாரங்களை கையாளும் மூத்த அதிகாரிகள் தெரிவித்தனர்.