வடகொரிய மர்ம தேசத்தில் நகர்வுகள் தொடர்பில் வெளியான தகவல்
25 Apr,2020
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தொடர்பிலான தகவல்கள் இன்னமும் தொடர் மர்மமாகவே இருக்கிறது. அந்நாட்டுக்குள் நடப்பது என்ன என்பதை அறிந்து கொள்வதற்கு சர்வதேச ஊடகங்கள் பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கின்றன்.
எனினும், தொடர்ந்தும் விடை தெரியா கேள்வியாக அவரின் உடல் நிலை தற்போது வரை மூடு மந்திரமாகவே இருக்கிறது.
இந்தநிலையில், ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுவதற்கு இணங்க அவர் மீண்டு வராது விட்டால், அவரது சகோதரி கிம் யோ ஜாங் ஆட்சிக்கு வர வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் கிம் யோ ஆட்சி என்பது 8 ஆண்டு கால கிம் ஜாங் ஆட்சியை விடவும் மிக கொடூரமாக இருக்கும் என ஆய்வாளர் Natasha Lindstaedt சுட்டிக்காட்டியுள்ளார்.
வடகொரிய தலைவர் கிம் ஜாங் தம்மை எதிர்ப்பவர்கள் மீது எந்த இரக்கமும் காட்டியதில்லை, அது தமது உறவினர்களாக இருந்தாலும் கடுமையாகவே நடந்து கொண்டார்.
ஆனால் கிம் ஜாங் ஆட்சியை விடவும் கிம் யோ ஆட்சி மிகவும் கொடூரமாக இருக்கும் என நிபுணர்கள் கணிக்கின்றனர்.
புதுவகை ஆயுதங்கள் மீது அதிக நாட்டம் கொண்ட கிம் யோ, வடகொரியாவின் அடுத்த தலைவராக தம்மை தயார் படுத்தியும் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
பெண் என்பதால் வடகொரிய ஆளும் வர்க்கம், கிம் யோவை புறக்கணிக்காது என்றும், கிம் குடும்பத்தாரை அங்குள்ள மக்கள் கடவுளுக்கு நிகராகவே பார்க்கிறார்கள் எனவும் நடாஷா குறிப்பிடுகிறார்.
கிம் யோ ஆட்சி பொறுப்புக்கு வந்தால், தற்போது கிம் ஜாங் எவ்வாறு பார்க்கப்படுகிறாரோ அதேப்போன்ற நிலையில் கிம் யோ உயர்த்தப்படுவார்.
அதுமட்டுமின்றி, தமது சகோதரர் கிம் ஜாங் உலக நாடுகளை எதிர்கொண்டதை விட கிம் யோ கொஞ்சம் கடுமையாகவே நடக்க வாய்ப்பிருப்பதாக நடாஷா தெரிவிக்கிறார்.
கணினி அறிவியல் பட்டதாரியான கிம் யோ, சமீப காலமாக தமது சகோதரருக்கு உதவியாக அரசு அலுவல்களிலும் ஈடுபட்டு வருகிறார்.
தமது 9-வது வயதில் இருந்தே சுவிட்சர்லாந்தில் கல்வியை முடித்துள்ள கிம் யோ, பல்கலைக்கழக படிப்பை வடகொரியாவுக்கு திரும்பிய பின்னர் முடித்தார்.
கிம் யோ தொடர்பில் தெரிந்து வைத்திருக்கும் கிம் ஜாங்கின் மனைவி ரி சோல் ஜூ, கண்டிப்பாக ஆட்சியை கைப்பற்றும் நடவடிக்கையில் இறங்கமாட்டார் என்றே கூறப்படுகிறது.
வடகொரியாவின் இதுவரையான ஆயுத குவிப்புகளுக்கு காரணம் கிம் யோ என நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
மட்டுமின்றி கிம் யோ உண்மையில் அவரது தந்தை, தாத்தாவை விடவும் கொடூர புத்தி கொண்டவர் எனவும், அது கிம் ஜாங் தெரிந்து வைத்துள்ளார் என்றும் சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
உலக நாடுகளில் கொரோனா கோரத்தாண்டம் ஆடிக் கொண்டிருக்கிறது. ஆனால், வடகொரியாவில் மட்டும் பல்வேறு மர்மங்களைக் கொண்டு ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது