பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வரை ஓய மாட்டேன் - டிரம்ப் ஆவேசம்
,
கொரோனா வைரஸ் தொற்று நோயால் வல்லரசு நாடான அமெரிக்கா கதிகலங்கி வருகிறது. அங்கு 8ண லட்சத்துக்கும் அதிகமானோரை இந்த வைரஸ் தொற்றுநோய் தாக்கி உள்ளது. 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் இருந்து மீள வழிதெரியாமல் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் திணறி வருகிறது.
இந்தநிலையில் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் டிரம்ப், நேற்று முன்தினம் (புதன்கிழமை) நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவரிடம் கொரோனா வைரசுக்கு எதிரான போரில் அமெரிக்கா பல லட்சம் கோடி டாலர் மதிப்பிலான நிதி சலுகை திட்டங்களை செயல்படுத்தியதால், நாட்டின் கடன் பெருகி இருப்பது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அந்தக் கேள்விக்கு டிரம்ப் விரிவாக பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அமெரிக்கா (கொரானா வைரஸ் பெயரால்) தாக்கப்பட்டுள்ளது. இது ஒரு தாக்குதல்தான். இது காய்ச்சல் மட்டுமல்ல, இதுபோன்ற ஒன்றை யாரும் பார்த்தது இல்லை. கடைசியாக (முதல் உலகப்போரின்போது) 1917-ல்தான் இப்படி நடந்ததை பார்த்தோம்.
நமக்கு இப்போது வேறு வழி இல்லை. எல்லாவற்றையும் பற்றி எப்போதுமே நான் கவலைப்படுகிறேன். நாம் பிரச்சினை இதுதான் என முடிவு செய்தாக வேண்டும். உலகிலேயே நமது பொருளாதாரம்தான் மிகப்பெரியது. சீனாவை விட, உலகின் பிற நாடுகளை விட நமது பொருளாதாரம்தான் பெரியது. கடந்த 3 ஆண்டுகளில் இந்த பொருளாதாரத்தை நாம் கட்டமைத்தோம்.
ஆனால் ஒரே நாளில் அவர்கள் வந்து விட்டனர். நீங்கள் அதை மூட வேண்டும் என்று கூறி விட்டனர். நாம் மீண்டும் அதைத் திறக்கத்தான் போகிறோம். நாம் மீண்டும் வலுவான நிலைக்கு போவோம்.
நாம் நமது விமான நிறுவனங்களை பாதுகாத்தோம். நாம் நிறைய நிறுவனங்களை காத்தோம். அவைதான் சிறந்த நிறுவனங்களாக 2 மாதங்களுக்கு முன் உருவெடுத்தன. ஆனால் ஒரே நாளில் அவற்றுக்கான சந்தை மூடப்பட்டது.
தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் குறையத்தொடங்கி உள்ளது.
இந்த போக்கானது, கொரோனா வைரசுக்கு எதிரான நமது உத்திகள் சரியானவை என்பதைத்தான் காட்டுகிறது. பல மாகாணங்களும் பாதுகாப்பாக பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கப்போகின்றன. அது மிகவும் உற்சாகம் அளிப்பதாக இருக்கிறது.
அமெரிக்க பொருளாதார வளங்களை நான் முழுமையாக மீட்டெடுக்கிற வரையில் ஓய மாட்டேன். நான் இதை நம்புகிறேன். முன்பை விட நமது பொருளாதாரத்தை உயர்த்தப்போகிறோம். நிறைய புத்திசாலிகள் அதைப் பார்க்கிறார்கள். பந்தயம் கட்டுகிறார்கள். பங்குச்சந்தையில் என்ன நடக்கப்போகிறது என்பதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள். இவ்வாறு டிரம்ப் கூறினார்.
அமெரிக்கா, கொரோனா வைரசுக்கு எதிரான போரில் சிகிச்சைகளுக்காக, சோதனை வசதிகளை ஏற்படுத்துவதற்காக, 7 பில்லியன் டாலர் தொகையை (சுமார் ரூ.52 ஆயிரத்து 500 கோடி) திருப்பி விட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது