உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவின் உகான் நகரில் தோன்றி மற்ற நாடுகளுக்கு பரவி உள்ளது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை பிற நாடுகளை பின்னுக்கு தள்ளி விட்டு முன்னணியில் உள்ளது.
அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்கு 45 ஆயிரத்து 318 பேர் பலியாகி உள்ளனர். இது கடந்த ஒரு வார காலத்தில் இரட்டிப்பாகி உள்ளது. இதுவரை 8 லட்சத்து 18 ஆயிரத்து 744 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 82 ஆயிரத்து 923 பேர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர்.
இவர்களில் நியூயார்க் நகரில் 2 லட்சத்து 56 ஆயிரத்து 555 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. நியூஜெர்சியில் 92 ஆயிரத்து 387 பேர் பாதிப்படைந்து உள்ளனர்.
நியூயார்க் நகரில் 19 ஆயிரத்து 693 பேரும், நியூஜெர்சியில் 4 ஆயிரத்து 753 பேரும் பலியாகி உள்ளனர்.
அமெரிக்காவின் 12 நகரங்களில் பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தினை கடந்து உள்ளது. இதேபோன்று 5 நகரங்கள், 10 ஆயிரம் முதல் 20 ஆயிரத்திற்கு உட்பட்ட பாதிப்படைந்தோர் எண்ணிக்கையை கொண்டுள்ளன.
கொரோனா வைரஸ் சிகிச்சையில் மலேரியாவுக்கு எதிரான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளின் பாதுகாப்புத் தன்மையை ஆய்வாளர்கள் பலரும் கேள்விக்குட்படுத்தி எச்சரித்து வரும் நிலையில் அதிபர் டிரம்ப் உள்பட பலரும் இதுதான் தீர்வு என்ற ரீதியில் செயல்பட அது தற்போது பின்னடைவை சந்தித்துள்ளதாக அமெரிக்காவிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது கொரோனா நோயாளிகள் சிலர் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளினால் மரணமடைந்துள்ளதாக தற்போது அமெரிக்காவிலிருந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.
டிரம்ப் நிர்வாகம் 30 மில்லியன் டோஸ்கள் ஹைட்ராக்ஸி குளோரோகுயினை இருப்பு வைத்துள்ளது, இதில் பெருமளவு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டவை.
தன்னுடைய சொந்த நலன்களுக்காக அதிபர் டிரம்ப் எந்த ஒரு விஞ்ஞான ஆதாரமும் இல்லாமல் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை பரிந்துரை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது, ஹைட்ராக்ஸி குளோரோகுயினால் மரணங்கள் குறித்து டிரம்ப் கூறும் போது
எனக்கு இது பற்றி ஒன்றும் தெரியவில்லை, சில நல்ல ரிப்போர்ட்களும் உள்ளன, ஆனால் இது நல்ல ரிப்போர்ட் அல்ல, இது தொடர்பாக நாம் ஒருகட்டத்தில் முடிவெடுப்போம் என கூறி உள்ளார்.
நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹெல்த் நிதி அளிக்கப்பட்டு நடத்திய ஆய்வில், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மூலம்தான் மரண விகிதம் அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
அதன் அறிக்கையில், கொரோனா சிகிச்சைக்கான மாதிரிகள் தற்போது ஆய்வுகளில் உள்ளன, ஹைட்ராக்ஸி குளோரோகுயின் அல்லது குளோரோகுயின் கொரோனா சிகிச்சையில் பயன்படுத்தலாமா வேண்டாம என்பது பற்றி மருத்துவ புள்ளி விவரங்கள் இல்லை.
குளோரோகுயின் அல்லது ஹைட்ராக்சிகுளோரோகுயின் அளித்தால் நோயாளியை மருத்துவர்கள் உன்னிப்பாக கண்காணித்து மோசமான விளைவுகள் பக்க விளைவுகள் ஏற்படுகிறதா என்பதை தீர்மானிக்க வேண்டும்’ என்று எச்சரித்துள்ளது.
இதனையடுத்து சுகாதார நிபுணர்கள் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் அசித்ரோமைசின் ஆகியவற்றை சேர்த்து கொடுப்பதை கண்டிக்கின்றனர். ஏனெனில் இதனால் நச்சுத்தன்மை அதிகரிக்கலாம் என்று எச்சரித்துள்ளனர்.
ஆனால் அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் கழக ஆணையர் ஸ்டீபன் எம்.ஹான் , இது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றார்.
அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் பில் பாஸ்க்ரெல் கூறும் போது கொரோனா தொற்றுக்கான சிகிச்சையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்பாடு குறித்த ஆய்வறிக்கை டிரம்ப் மற்றும் அவரது நிர்வாகத்தின் மீதான வெடிகுண்டு தாக்குதலாகும், அறிவியலை விட அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்ததன் விளைவை சந்திக்கிறோம்.
ஆதாரமில்லாமல் ஹைட்ராக்ஸி குளோரோகுயினை டிரம்ப் பரிந்துரைத்தது பொறுப்பற்ற செயல், நான் ஏற்கெனவே அமெரிக்க உணவு மருந்துக் கழகத்தை எச்சரித்துள்ளேன், டிரம்பின் அரசியல் நெருக்கடிகளுக்கு அடிபணிய வேண்டாம் என்றும். அறிவியலை நம்பாமல் அரசியலை நம்பினால் நாம் இன்னமும் தேவையற்ற மரணங்களை சந்திக்க வேண்டியதுதான், வரலாறு நம்மை மன்னிக்காது என்று தெரிவித்துள்ளார்.