கொரோனா குறித்த விசாரணை: சீனாவுக்குள் வர அமெரிக்க குழுவுக்கு அனுமதி மறுப்பு!
21 Apr,2020
கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பித்த விடயம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக அமெரிக்கா அனுப்பும் விசாரணைக் குழுவை அனுமதிக்க முடியாத என சீனா அறிவித்துள்ளது.
இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் கெங் ஷூவாங் (Geng Shuang) நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், “இந்த வைரஸ் அனைத்து மனிதர்களுக்கும் பொதுவான எதிரி. இது உலகில் எந்த நேரத்திலும் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் தோன்றலாம். மற்ற நாடுகளைப் போலவே, சீனாவும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் சீனா குற்றவாளியல்ல, பாதிக்கப்பட்ட நாடு. இந்த வைரசை நாங்கள் உருவாக்கவில்லை.
இந்த வைரஸ் வெளிப்பட்டதில் இருந்து, வைரஸ் பரவுவதைத் தடுக்க சீன அரசு மிகவும் முழுமையான மற்றும் வலுவான நடவடிக்கைகளுடன் வெளிப்படையான முறையில் செயற்பட்டு வருகிறது. வைரசைக் கட்டுப்படுத்த சீனா மேற்கொண்ட முயற்சிகள், சர்வதேச சமூகம் தங்கள் நாடுகளில் வைரசை கட்டுப்படுத்துவதற்கான மதிப்புமிக்க அனுபவத்தை வழங்கியுள்ளன. இதற்காக சர்வதேச சமூகம் சீனாவைப் பாராட்டியுள்ளது.
உலகில் ஏற்பட்ட ஏராளமான உயிரிழப்புகளுக்கு சீனா மீது வழக்குத் தொடரப்பட வேண்டும் என அமெரிக்க அரசியல்வாதிகள் கூறுகின்றனர். அத்தகைய வழக்குத் தொடர எந்த முன்னுரிமையும் இருப்பதாக எனக்கு நினைவில் இல்லை.
2009ஆம் ஆண்டில் அமெரிக்காவில் எச்1-என்1 வைரஸ் கண்டறியப்பட்டது. எச்.ஐ.வி/எய்ட்ஸ் கண்டறியப்பட்டது. 2008ஆம் ஆண்டில் அமெரிக்காவின் நிதி நெருக்கடி உலகளாவிய பொருளாதார நெருக்கடியாக மாறியது. இதற்கு அமெரிக்காதான் பொறுப்பேற்க வேண்டும் என யாராவது கேட்டார்களா?” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
சீனாவின் வுஹான் நகரில்தான் கொரோனா வைரஸ் முதன்முதலில் வெளிப்பட்டது. வுஹானில் உள்ள வைரலொஜி ஆய்வகத்தில் இருந்து இந்த வைரஸ் வெளிப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தற்போது, சீனாவில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ள போதும் உலகின் 200 இற்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் மனித அழிவுகளை ஏற்படுத்தி வருகிறது. இதில் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா காணப்படுகிறது. இதனால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சீனா மீது அடிக்கடி தனது விமர்சனத்தை முன்வைத்து வருகின்றார்.
கொரோனா குறித்து சீனா முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் மறைத்து விட்டதாக குற்றம் சாட்டினார். அத்துடன், கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்பது குறித்து விசாரணை நடத்த சீனாவுக்கு நிபுணர் குழுவை அமெரிக்கா அனுப்ப விரும்புவதாக ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் வுஹான் வைரலொஜி ஆய்வகத்தில் இருந்து கொடிய வைரஸ் வெளிப்பட்டதா என்பது குறித்து அமெரிக்கா தற்போது ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில், விசாரணைக் குழுவை அனுமதிக்க வேண்டும் என்ற ட்ரம்பின் கோரிக்கையை சீனா நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.