ஈரானுக்கு வெண்டிலேட்டர்களை வழங்க தயார்; டிரம்ப் சொல்கிறார்!
20 Apr,2020
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இதனால் ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்து வருகிறது.
இந்த நிலையில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ஈரானும் உள்ளது. கொரோனா வைரசின் பரவலை எதிர்த்து போராடுவதற்கான தங்களது முயற்சிகளுக்கு அமெரிக்க பொருளாதார தடைகள் பெரும் இடையூறாக இருப்பதாக ஈரான் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்த நிலையில் ஈரானில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான வெண்டிலேட்டர்களை வழங்க தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர்களின் சந்திப்பின்போது இது குறித்து அவர் கூறியதாவது:-
ஈரான் மிகவும் வித்தியாசமான நாடு. ஆரம்பத்தில் அந்த நாடு முழு மத்திய கிழக்கு பிராந்தியத்தையும் கைப்பற்ற முயற்சி செய்தது. ஆனால் தற்போது அவர்கள் உயிர்பிழைத்தால் போதும் என்ற நிலையில் உள்ளனர். அவர்கள் நோயால் அவதிப்படுகிறார்கள்.
எனக்கு இது தேவையில்லை. எனினும் அவர்கள் விரும்பினால் அவர்களுக்கு உதவி செய்ய நான் முன்வருவேன். அவர்களுக்கு வெண்டிலேட்டர்கள் தேவைப்பட்டால் என்னிடம் உதவி கேட்கலாம். நான் அவர்களுக்கு வெண்டிலேட்டர்களை அனுப்புவேன். எங்களிடம் ஆயிரக்கணக்கான அதிகப்படியான வெண்டிலேட்டர்கள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.