கொரோனாவை குணப்படுத்தும் சர்ச்சின் 'அற்புத மருந்து'; விற்பனைக்கு அமெரிக்கா தடை
20 Apr,2020
புளோரிடாவில் உள்ள சர்ச் ஒன்றின், கொரோனாவை குணப்படுத்தும் 'அற்புத மருந்து' விற்பனையை அமெரிக்கா கோர்ட் தடை செய்துள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள சர்ச்சில், கொரோனாவை குணப்படுத்தும் 'அற்புத மருந்து' என ரசாயன கலவையை, கெமிக்கல் ஏஜெண்ட் விற்பனை செய்தார். இதுதொடர்பாக சர்ச் மற்றும் விற்பனை ஏஜென்ட் மீது அமெரிக்க கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின் முடிவில் அதனை விற்க உடனடியாக தடை விதித்து கோர்ட் உத்தரவிட்டது.
விசாரணையில், எம்.எம்.எஸ்.,(Miracle Mineral Solution) எனப்படும் அந்த 'அற்புத மருந்து' கொரோனாவை குணப்படுத்தும் எனவும், அல்சைமர், ஆட்டிசம், கேன்சர் மற்றும் எய்ட்ஸ் உள்ளிட்டவற்றையும் குணமாக்கும் என சர்ச் தரப்பில் வாதிக்கப்பட்டது.
விசாரணையின் முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: எம்.எம்.எஸ்., ஒரு கெமிக்கல் தயாரிப்பு. இதனால், குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் உடலில் கடுமையான நீர் பற்றாக்குறை போன்ற பிரச்னைகள் ஏற்படும் என அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் எச்சரித்துள்ளது. இம்மருந்து விற்பனைக்கு உடனடியாக தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக கடந்த ஏப்.,8ம் தேதி, எம்.எம்.எஸ்., விற்பனையை நிறுத்த வேண்டும் என சர்ச்களுக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதும், ஆன்லைனில் தொடர்ந்து விற்பனை செய்து வந்துள்ளனர். சர்ச்சின் சடங்குகளில் தலையிடுவதாக சர்ச் தரப்பில் அறிக்கையும் வெளியிடப்பட்டது. அதில், இது எங்கள் மதத்துடன் சம்பந்தப்பட்டது. எங்களுக்கு இது புனிதமானது என கூறப்பட்டது