உகானில் கொரோனாவால் ஏற்பட்ட பலி எண்ணிக்கையில் குளறுபடி, ஒப்புக்கொண்ட சீனா!
17 Apr,2020
தற்போது உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் முதன் முதலில் சீனாவின் உகான் நகரில் இருந்துதான் கண்டறியப்பட்டது. கொரோனாவின் மைய நகரமாக விளங்கிய உகான், தற்போது அந்நோய்தொற்றில் இருந்து மீண்டுள்ளது. எனினும், கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு விகிதத்தை சீனா மறைத்துவிட்டதாக அமெரிக்கா சந்தேகம் எழுப்பியது.
இப்படிப்பட்ட சூழலில், உகானில் கொரோனா காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கையை சுமார் 50 சதவீதம் சீனா தற்போது உயர்த்தியுள்ளது. இறப்பு எண்ணிக்கையைக் கணக்கிடுவதில் தவறு நடந்து விட்டதாகவும், அதனால்தான் தற்போது அதன் சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் காரணம் சொல்லப்படுகிறது.
உகானில் கொரோனா வைரஸ் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கையில் 1,290 பேரை சேர்த்துள்ளதாக உகான் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் உகானில் கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,869 ஆக அதிகரித்துள்ளது.
இறப்பு விகிதம் 50 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்து வெளியிட்டுள்ள சீன அரசு தரப்பு, கொரோனா வைரசின் ஆரம்ப கட்டத்தில், அரசு பணியாளர்களால் சரியாக கையாள முடியவில்லை எனவும் பல நேரங்களில் முக்கிய விவகாரங்கள் தாமதகாவும், சில நேரங்களில் ஆவணப்படுத்தப்படாமலும் போனதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், ஆரம்பக் கட்டத்தில் எங்களால் எல்லோருக்கும் உரிய சிகிச்சை அளிக்க முடியவில்லை. சிலர், வீட்டிலேயே கொரோனா தொற்றால் இறந்து போனார்கள். அது குறித்தும் சரியாக பதிவு செய்யப்படவில்லை என்று விளக்கியுள்ளது.
உகான் நகரில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வெளியிடப்பட்டதன் மூலம், சீனாவில் கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ண்க்கை 4,632 ஆக உயர்ந்துள்ளது.