ஈகுவடார் தூதரகத்தில் தலைமறைவு வாழ்க்கை: 2 குழந்தைகளுக்கு தந்தையான அசாஞ்சே!
15 Apr,2020
ஆஸ்திரேலியா குயின்லாந்து மாகாணத்தில் பிறந்து, சுவீடன் நாட்டில் வாழ்ந்து வந்தவர் ஜூலியன் அசாஞ்சே. இவர் கடந்த 2006-ம் ஆண்டு ‘விக்கி லீக்ஸ்’ புலனாய்வு இணையதளத்தை தொடங்கினார். இந்த இணையதளம் வாயிலாக சர்வதேச அளவில் எண்ணற்ற புலனாய்வு செய்திகளை வழங்கி வந்தார்.
அந்த வரிசையில் அமெரிக்காவின் ராணுவ ரகசியங் கள் தொடர்பான ஆவணங் களை அசாஞ்சே, ‘விக்கி லீக்ஸ்’ இணையதளத்தில் வெளியிட்டார். இதன் மூலம் அவர் சர்வதேச அளவில் பிரபலமானார். அதே சமயம் தங்களின் ராணுவ ரகசியங்களை வெளியிட்டதால், அமெரிக்காவின் கோபத்துக்கு ஆளானார் அசாஞ்சே.
அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன், அசாஞ்சேவுக்கு எதிரான தனது பழிவாங்கல் நடவடிக்கையை தொடங்கியது. அசாஞ்சே மீது வழக்கு தொடர்ந்த அமெரிக்கா, அவரை உடனடியாக கைது செய்து தங்களிடம் ஒப்படைக் கும்படி சுவீடன் அரசை வலியுறுத்தியது.
இதற்கிடையில் சுவீடனைச் சேர்ந்த 2 பெண்கள் அசாஞ்சே மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தினர். இதையடுத்து, தனக்கு நெருக்கடி அதிகமானதால் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஈகுவடார் நாட்டு தூதரகத்தில் அசாஞ்சே தஞ்சம் கோரினார். பின்னர் அவரது கோரிக்கை ஏற்கப்பட்டு அவருக்கு பாதுகாப்பு கிடைத்தது.
எனினும் அசாஞ்சேவுக்கு வழங்கிய அடைக்கலத்தை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஈகுவடார் அரசு வாபஸ் பெற்றது. இதையடுத்து, லண்டன் போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார். கடந்த ஒரு வருடமாக லண்டனில் உள்ள பெல்மார்ஷ் சிறையில் அடைக் கப்பட்டுள்ள அசாஞ்சே, அமெரிக்கா மற்றும் சுவீடன் நாடுகளின் வழக்கை எதிர்கொண்டு வருகிறார்.
இதனிடையே அசாஞ்சே அடைக்கப்பட்டுள்ள பெல்மார்ஷ் சிறையில் கொரோனா வைரஸ் தாக்கி கைதி ஒருவர் உயிரிழந்ததாக தெரிகிறது. இதனால் அசாஞ்சேவுக்கும் வைரஸ் தொற்று பரவ வாய்ப்பு இருப்பதால், அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கக்கோரி ‘விக்கி லீக்ஸ்’ நிறுவனம் சார்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஈகுவடார் தூதரகத்தில் தஞ்சமடைந்திருந்தபோது, தனக்காக வாதாடிய பெண் வக்கீல் ஒருவருடன் சேர்ந்து வாழ்ந்ததில் அசாஞ்சே 2 குழந்தைகளுக்கு தந்தையானதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஸ்டெல்லா மோரீஸ் என்ற பெண் வக்கீல், அண்மையில் தனியார் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், அசாஞ்சேவும், தானும் 2015-ம் ஆண்டு முதல் சேர்ந்து வாழ்ந்து வந்ததாகவும், தங்களுக்கு 2 ஆண் குழந்தைகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
அசாஞ்சே வாழ்க்கையின் விளிம்பில் இருக்கிறார் என்பதாலும், அவர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தப்பிப்பார் என்ற நம்பிக்கை தனக்கு இல்லை என்பதாலும், தங்களின் உறவை முதல் முறையாக வெளியுலகத்துக்கு தெரியப்படுத்துவதாக ஸ்டெல்லா மோரீஸ் கூறினார்.
3 வயதான கேப்ரியல், 1 வயதாகும் மேக்ஸ் ஆகிய இருவரும் தங்களது தந்தை அசாஞ்சே மீது அளவு கடந்த பாசம் வைத்திருப்பதாகவும், அவர்கள் ‘வீடியோ கால்’ மூலம் அசாஞ்சேவுடன் பேசி வருவதாகவும் ஸ்டெல்லா மோரீஸ் தெரிவித்தார்.
இதுபற்றி அவர் மேலும் கூறுகையில் “இந்த சூழலில் ஒரு குடும்பத்தை தொடங்குவது பலருக்கு பைத்தியக்காரத்தனமாகத் தோன்றும், எங்களை பொறுத்தவரை விஷயங்களை உண்மையாக வைத்திருப்பதுதான் விவேகமான விஷயம். இது என்னை அடிப்படையாக கொண்டது. அசாஞ்சே, குழந்தைகளை பார்க்கும்போது அது அவருக்கு நிறைய அமைதியையும், மகிழ்ச்சியையும், ஆதரவையும் தருகிறது. அவர்கள் மிகவும் மகிழ்ச்சியான குழந்தைகள்” என்றார்.