அடுக்கடுக்காக சவப்பெட்டிகள்’- ஹார்ட் தீவுகளில் புதைக்கப்படும் சடலங்கள்
14 Apr,2020
நியூயார்க்கின் ஹார்ட் தீவில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘கொரோனா வைரஸ்’ உலகத்தையே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சீனாவின் வுகான் நகரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட செய்திகளைக் கேள்விப்பட்டபோது நமக்கு இந்த நிலை வெகுவிரைவில் ஏற்படப்போகிறது என உலக மக்கள் யாரும் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள்.
கொரோனா அழையா விருந்தாளியாக ஒவ்வொரு நாட்டிலும் அடியெடுத்து வைத்துள்ளது .ஏழை, பணக்கார நாடுகள் என்ற பாரபட்சம் இல்லாமல் மனித குலத்திற்கு எதிராக வந்து நிற்கிறது. கண்ணுக்கே தெரியாத அந்த நுண்ணுயிரியிடமிருந்து தற்காத்துக்கொள்ள மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.
உலகத்தின் இயக்கம் அப்படியே நின்றுவிட்டது. மனிதர்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துவிட்டது. கொரோனாவுக்கு எதிராக மனிதகுலத்தைக் காக்கும் பொறுப்பை ஏற்று மருத்துவர்களும் செவிலியர்களும் போராடி வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனா தாக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் ஏராளம். அமெரிக்கா, இத்தாலி நாடுகளில் சீனாவை விட பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பிரேசிலின் பெரிய கல்லறைத் தோட்டம் ஒன்றில் 100-க்கும் மேற்பட்ட சவக்குழிகள் வெட்டப்பட்டு இருந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கடும் அதிர்ச்சியை கொடுத்தன. இப்போது நியூயார்க்கின் ஹார்ட் தீவில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நியூயார்க் நகருக்குச் சொந்தமான இந்த ஹார்ட் தீவானது ஆதரவற்றவர்களின் சடலங்களைப் புதைக்கும் இடமாக இருந்து வருகிறது.
கொரோனாவின் தாக்கம் அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நியூயார்க்கில் கொரோனா தாக்கம் அதிகம் இருப்பதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவில் மட்டும் 4,50,000க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு மட்டும் 17,800 பேர் உயிரிழந்துள்ளனர். நியூயார்க் நகரத்தில் மட்டும் 7,800 மரணங்கள் ஏற்பட்டுள்ளன.
பல வருடங்களாக நியூயார்க்கின் ஹார்ட் தீவுகளில் சடலங்கள் புதைக்கப்படுகின்றன. இந்த முறை வழக்கத்துக்கு மாறாக அதிக எண்ணிக்கையிலான சடலங்கள் அங்கு புதைக்கப்படுகின்றன.
அந்த ட்ரோன் வீடியோவை முதலில் பார்க்கும் போது ஆக்ஷன் படங்களில் க்ளைமாக்ஸ் காட்சிகள் இடம்பெறும் இடம் போல் காணப்படுகிறது. கடற்கரை ஓரம் அமைந்திருக்கும் பொழிவில்லாத கட்டடங்கள் அதைத்தான் நினைவுப்படுத்துகின்றன.
கொரோனா எழுதிய கொடூர க்ளைமாக்ஸ் காட்சிகள் இங்குதான் அரங்கேறுகின்றன. ஹார்ட் தீவின் கல்லறைத் தோட்டத்தில் வெட்டப்பட்ட ராட்சதக் குழிகளில் கொரோனாவால் உயிரிழந்த ஆதரவற்ற ஏராளமானவர்களின் சடலங்கள் வரிசையாக புதைக்கப்படுகின்றன. அதை அங்கு உள்ள ஊழியர்கள் மண்ணைக் கொண்டு நிரப்புகின்றனர்.
இந்தப் பணிகளுக்கு முன்பு சிறைக்கைதிகளைப் பயன்படுத்தி வந்தார்களாம். இப்போது கொரோனா நோய்த் தாக்கம் காரணமாக ஏராளமானவர்கள் உயிரிழப்பதால் வேலைப்பளு அதிகம் இருப்பதால் ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணியில் அமர்த்தியிருப்பதாக நியூயார்க் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 1980, 90களில் ஹெச்ஐவி/எய்ட்ஸ் தாக்கம் அமெரிக்காவில் அதிகம் இருந்தது. நோய்த் தாக்கத்தால் இறப்பவர்களைப் புதைக்க ஹார்ட் தீவைப் பயன்படுத்தியதாகவும் அந்த சோகம் மீண்டும் தொடர்கிறது எனச் சிலர் ட்விட்டரில் வருத்தத்துடன் பதிவிட்டுள்ளனர்