ஊரடங்கை தளர்த்துவது வைரசின் பயங்கர மறு தாக்குதலுக்கு வழிவகுக்கும் – உலக சுகாதார அமைப்பு பகிரங்க எச்சரிக்கை
11 Apr,2020
உலக நாடுகள் தாங்கள் நடைமுறைப்படுத்தியுள்ள ஊரடங்கை விரைவாக தளர்த்துவது வைரசின் மறு தாக்குதலுக்கு வழிவகுக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகம் முழுவதும் 16 லட்சத்து 88 ஆயிரத்து 159 பேருக்கு வைரஸ் பரவியுள்ளது.
வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 12 லட்சத்து 10 ஆயிரத்து 667 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 49 ஆயிரத்து 774 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா பரவியவர்களில் 3 லட்சத்து 75 ஆயிரத்து 283 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 209 பேர் பலியாகியுள்ளனர்.
இதற்கிடையில், வைரஸ் பரவும் வேகத்தை கட்டுப்படுத்த உலகின் பல்வேறு நாடுகள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. அத்தியாவசிய காரணங்களை தவிர மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலும் மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை (21 நாட்கள்) நாடு முழுவதும் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவ வாகனங்கள், அத்தியாவசியப்பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட வாகன போக்குவரத்துக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பயணிகள் ரெயில் சேவைகள், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அமலில் உள்ள 21 நாட்கள் ஊரடங்கு வரும் செவ்வாய்க்கிழமையுடன் முடிவுக்கு வருகிறது. இந்த ஊரடங்கை நீட்டிக்கலாமா? ஊரடங்ககை தளர்த்தலாமா? என்ற விவகாரத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இன்று ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது.
இந்நிலையில், உலகின் பல்வேறு நாடுகள் அமல்படுத்தியுள்ள ஊரடங்கை விரைவாக தளர்த்துவதால் வைரஸ் அதிபயங்கர மறு எழுச்சிக்கு வழிவகுக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் பேசியதாவது:-
”ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ள சில நாடுகள் ஏற்கனவே மக்கள் வீடுகளிலேயே இருக்கவேண்டும் என விதித்துள்ள கட்டுபாடுகளை தளர்த்த திட்டமிட்டுள்ளது. அனைவரையும் போல உலக சுகாதார அமைப்பும் நாடுகள் விதித்துள்ள சில கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என விரும்புகிறது.
அதே நேரம் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மிகவும் விரைவாக தளர்த்துவது வைரசின் பயங்கர மறு தாக்குதலுக்கு வழி வகுக்கும். இந்த நிலைமையை திறம்பட நிர்வகிக்கத்தவறினால் மாறுபாடான எதிர்மறை விழைவுகளை சந்திக்க நேரிடும்’’ என்றார்.