இத்தாலியில் நீடிக்கப்படுகிறது நாடளாவிய முடக்கம்
11 Apr,2020
கொரோனா வைரஸ் காரணமாக இத்தாலியில் அமுல்படுத்தப்பட்டுள்ள நாடளாவிய முடக்கம் எதிர்வரும் மே மாதம் மூன்றாம் திகதி வரை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு அதிகளவில் முகங்கொடுத்த நாடுகளில் இத்தாலியும் உள்ளடங்குகிறது. குறித்த வைரஸ் பரவலால் நாடளாவிய ரீதியில் நாளாந்த ஆயிரக்கணக்கானோர் மரணித்து வருகின்றனர். வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் இத்தாலியில் நாடளாவிய முடக்கம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்நாட்டில் நோய்த்தாக்கம் இன்னும் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படாமையால் குறித்த முடக்கம் எதிர்வரும் மே மாதம் 3ம் திகதிவரை நீட்டிக்கப்படும் என அந்நாட்டு பிரதமர் ஜிஷொப் கொன்ரே Giuseppe Conte நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “நாம் இப்போது குறித்த ஊரடங்கை தளர்த்துவோமாக இருந்தால் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுவரும் நோயாளர்களை ஆபத்தில் இடுகின்ற அதேவேளை, மரண எண்ணிக்கையினை மீண்டும் உயர்த்துவதற்கு வழிவகை செய்யும்” என தெரிவித்துள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் 20 ம் திகதி இத்தாலியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் நபர் அடையாளம் காணப்பட்டமையினை தொடர்ந்து, அங்கு வைரஸ் பரவல் சடுதியாக அதிகரித்தது.
இந்நிலையில் ஏற்கனவே இத்தாலியில் ஒரு மாதகாலம் நாடளாவிய முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.