சீனாவில் இரண்டாவது தாக்குதலுக்குத் தயாராகும் கொரோனா- சீன ஜனாதிபதி எச்சரிக்கை!
09 Apr,2020
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிவரும் நிலையில் சீனாவிலும் அதன் இரண்டாவது பரவல் ஏற்படக்கூடிய ஆபத்து இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி ஷி ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீனாவின் அதிகாரம்மிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ நிலைக்குழுவில் கலந்துகொண்டு பேசிய அவர், வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பும் சீனர்களால் இந்த ஆபத்து ஏற்படலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், நாட்டில் மீண்டும் கொரோனா தாக்கம் வரக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக அரச செய்தி நிறுவனமான ஷின்ஹுவா (Xinhua) தெரிவித்துள்ளது.
கொரோனாவின் பாதிப்பில் இருந்து சீனாவின் பொருளாதாரம், சமூக வளர்ச்சி மீண்டுவரும் நிலையில் அவற்றைத் தடுக்கும் புதிய சவால்களும் சிக்கல்களும் உருவாகிவருவதாக ஷி ஜின்பிங் கவலை தெரிவித்ததாக அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
சீனாவின் ஹூபே மாகாணத்தின் வுஹான் நகரில் ஆரம்பித்திருந்த கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் மனித அழிவை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில் சீனாவில் இந்த வைரஸூக்கு இதுவரை 81 ஆயிரத்து 865 பேர் பாதிக்கப்பட்டு அவர்களில் 3 ஆயிரத்து 335 பேர் மரணித்த நிலையில் 77 ஆயிரத்து 370 பேர் குணமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்க அறிவிப்பு பதிவாகியுள்ளது.
இந்நிலையில் அங்கு ஆங்காங்கே ஒருசில மரணப்பதிவுகள் ஏற்பட்டுவருகின்ற போதும், கடும் பாதிப்புக்குள்ளான வுஹான் நகரமும் வழமைக்குத் திரும்பியுள்ளது.
இந்த சூழலில் சீனா, கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள நிலையிலும் அடுத்த கட்ட அபாய நிலை குறித்து ஷி ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.