100 அதிவேக ரயில்கள், 200 விமானங்கள் தயார் -உகான் மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்கிறார்கள்
09 Apr,2020
சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது, அமெரிக்காவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக உலகம் முழுவதும், 14 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 88 ஆயிரம் பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். நேற்று முன்தினம் கொரோனாவால் எந்த மரணமும் நிகழவில்லை என நேற்று அரசு தகவல் வெளியிட்டது.இந்நிலையில், கொரோனா வைரஸ் உருவெடுத்த சீனாவின் உகான் நகரம் சுமார் 11 வாரங்களின் பின்னர் நேற்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பிற்குள்ளான நபர்கள் அடையாளம் காணப்படுவது இல்லாத நிலையில், அங்கு கொரோனா பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு நம்பிக்கை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் சீன நகரமான உகானில், கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டவர்கள் வெளியூர்களுக்கு பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்து திறக்கப்பட்டுள்ளன. உகானிலிருந்து பெய்ஜிங் உள்ளிட்ட சீனாவின் மற்ற பகுதிகளுக்கு 200 விமானங்கள் புறப்படத் தயாராக உள்ளன. இவற்றின் மூலம் 10,000 பேர் வரை நகரை விட்டு வெளியேறலாம் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
மேலும், கிட்டத்தட்ட 100 அதிவேக ரயில்கள் உகானிலிருந்து மற்ற நகரங்களுக்குச் செல்ல தயார் நிலையில் உள்ளன. விமானம் மற்றும் ரயில்கள் மூலம் 65 ஆயிரம் பேர் உகானை விட்டு வெளியேறியுள்ளர். இதேபோல் சாலைப் போக்குவரத்தும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. தளர்வை வரவேற்கும் விதமாக இரவே கட்டடங்களில் வண்ண விளக்குகளைப் பரவவிட்டு தங்கள் மகிழ்ச்சியை உகான் மக்கள் வெளிப்படுத்தினர்.