துருக்கியில் அரசுக்கு எதிராக 288 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த இளம் பாடகி மரணம்
05 Apr,2020
துருக்கியை சேர்ந்தவர் 28 வயதான இளம் பாடகி ஹெலின் போலக். நாட்டுப்புற இசையினை அடிப்படையாக கொண்டு பாடல்களை உருவாக்கும் ‘குரூப் யோரம்’ என்ற பிரபலமான இசைக்குழுவை சேர்ந்தவர் இவர்.
அரசுக்கு எதிரான புரட்சிகர கருத்துகளை பாடி வந்த ‘குரூப் யோரம்’ இசைக்குழுவை துருக்கி அரசு 2016-ம் ஆண்டு தடை செய்தது. குழுவில் சிலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து தங்கள் இசைக்குழு மீதான தடையை நீக்கவும், கைது செய்யப்பட்ட சகாக்களை விடுவிக்கக்கோரியும் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார் ஹெலின் போலக். கடந்த மாதம் ஹெலினின் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததை தொடர்ந்து மனித உரிமை ஆர்வலர்கள் குழுவானது துருக்கி அரசிடம் ஹெலிலின் போராட்டம் குறித்து பேசியது.
ஆனால் ஹெலின் உண்ணாவிரத போராட்டத்தை நிறுத்தாமல், அவரது கோரிக்கைகளை பரிசீலிக்க முடியாது என துருக்கி அரசு கூறிவிட்டது. இதற்கிடையில் கடந்த மார்ச் 11-ந்தேதி ஹெலின் வலுக்கட்டாயமாக சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.
ஆனால் சிகிச்சைக்கு அவர் ஒத்துழைக்காததால் ஒரே வாரத்தில் வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அதன் பின்னரும் அவர் அரசுக்கு எதிரான உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தார்.
இந்த நிலையில் கடந்த 288 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வந்த ஹெலின் போலக் நேற்று முன்தினம் அவரது வீட்டில் உயிரிழந்தார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது