சிகிச்சைக்கான மருந்தை இந்தியாவிடம் கேட்டுள்ளேன் - அமெரிக்க அதிபர் ட்ரம்ப்
05 Apr,2020
கொரோனா சிகிச்சைக்கான மருந்தை தருமாறு இந்திய பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் வல்லரசு நாடான அமெரிக்காவைச் சூறையாடியுள்ளது. அதேசமயம் வளரும் நாடான இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகிறது. இதுதவிர உலகின் பல்வேறு நாடுகளையும் கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புடன் இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார்.
இந்த உரையாடலின்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு குறித்து இருநாட்டுத் தலைவர்களும் பேசியுள்ளனர். அத்துடன் கொரோனாவிற்கு எதிராக நாடுகளும் இணைந்து போராடுவது தொடர்பாக ஆலோசித்ததாகத் தெரிகிறது.
இது குறித்து வாஷிங்டனில் பேசிய ட்ரம்ப், மோடியிடம் தொலைபேசியில் பேசியதாகவும் அப்போது கொரோனா சிகிச்சைக்கான ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை வழங்குமாறு கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்துகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதை இந்தியா நிறுத்தி வைத்துள்ள நிலையில் ட்ரம்ப் இவ்வேண்டுகோளை விடுத்துள்ளார். மருத்துவர்களுடன் பேசிவிட்டு இம்மருந்தை தானே உட்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் ட்ரம்ப் கூறினார். இதைத்தொடர்ந்து பேசிய அவர் கொரோனாவால் அமெரிக்காவில் அடுத்த 2 வாரங்களில் ஏராளமான உயிரிழப்புகள் நேரக்கூடும் என்றும் கவலை தெரிவித்தார்.
கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை இயன்ற அளவு தடுக்க தமது அரசு அதிகபட்ச முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும், கொரோனா பரவுவதை தடுக்கும் நடவடிக்கையில் ஆயிரக்கணக்கான ராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.