உலக நாடுகளை ஏமாற்றியுள்ள சீனா: அமெரிக்க உளவுத்துறையின் அறிக்கையில் முக்கிய தகவல்!
02 Apr,2020
கொரோனா வைரஸால் நேரிட்ட உண்மையான உயிரிழப்பு மற்றும் பாதிப்பு எண்ணிக்கையை சீனா மறைத்து விட்டதாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கை அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனாவின் பிறப்பிடமான சீனாவை விட அமெரிக்காவில் உயிரிழப்பும், பாதிப்பும் அதிகளவில் உள்ளது. இந்நிலையில், அமெரிக்க அரசிடம் கடந்த வாரம் அந்நாட்டு உளவுத் துறை அளித்துள்ள அறிக்கையில், சீனா வேண்டுமென்றே உண்மையான தகவல்களை மறைத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
மேலும், பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கை குறித்த சீனாவின் புள்ளி விவரங்கள் போலியானவை எனத் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்க உளவுத்துறை அறிக்கை மிகவும் இரகசியமானது என்பதால் முழு விவரங்கள் தெரியவில்லை. பெயர் குறிப்பிட விரும்பாத அமெரிக்க அரச அதிகாரிகளே இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த சூழலில் கொரோனா வைரஸ் பரவல் மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து சீனா அளித்துள்ள தகவல்களின் நம்பகத்தன்மை குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
வொஷிங்ரனில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சீனாவை விட அமெரிக்காவில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்திருப்பது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அது தவறான செய்தி என பதிலளித்த ட்ரம்ப், சீனா அளித்துள்ள தகவல்கள் உண்மை தானா என்பது யாருக்கு தெரியும் என்றார்.
மேலும் ஆரம்பம் முதலே கொரோனா வைரஸ் குறித்த தகவல்களை சீனா மூடிமறைக்கவே முயன்றதாகவும், அமெரிக்க உளவுத்துறையும் சீனாவின் புள்ளிவிவரங்கள் குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.
சீனாவுடன் நல்லுறவு நீடிக்கும் போதிலும், கொரோனா விடயத்தில் சீனா நம்பத்தகுந்த நாடு அல்ல எனவும் இழைத்துவிட்டதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.