இளவரசர் வில்லியம் ஆம்புலன்ஸ் விமானியாக செயல்பட விருப்பம்
                  
                     02 Apr,2020
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	
	இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், டயானா தம்பதியரின் மூத்த மகன் இளவரசர் வில்லியம்(வயது 37).
	
	இவர் 2 ஆண்டு காலம் ஆம்புலன்ஸ் விமானியாகவும் செயல்பட்டு வந்தார். 2017-ம் ஆண்டு அதில் இருந்து விலகினார்.
	தற்போது இங்கிலாந்து உள்ளிட்ட உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், நாட்டுக்காக மீண்டும் ஆம்புலன்ஸ் விமானி பணிக்கு திரும்ப இளவரசர் வில்லியம் விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது. ஆனால் இளவரசர் என்ற தகுதியில், அவர் செய்ய வேண்டிய அரச கடமைகள் இருப்பதால், அவை அவரது ஆம்புலன்ஸ் விமானி விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ள தடையாக அமைந்துவிடும் என லண்டன் தகவல்கள் கூறுகின்றன.
	இந்த மாத தொடக்கத்தில் என்.எச்.எஸ். என்னும் தேசிய சுகாதார பணிகள் அழைப்பு மையத்துக்கு இளவரசர் வில்லியம் சென்றிருந்ததும், அப்போது அவர் உயிர் காக்கும் பணியான ஆம்புலன்ஸ் விமானி பணியை விட்டதற்காக வருத்தம் தெரிவித்ததும் நினைவுகூரத்தக்கது.
	ஆனால் தற்போது இளவரசர் சார்லஸ் கொரோனா தொற்றின் காரணமாக தனிமைப்படுத்திக்கொண்டு ஓய்வில் இருக்கிறார். வில்லியம் தம்பி ஹாரி அரச பொறுப்பில் இருந்து விலகிச்சென்று விட்டார். இதன் காரணமாக வில்லியம், அரச கடமைகளில் ஆற்றுகிற மூத்த உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இருப்பினும் இளவரசர் வில்லியம் ஆம்புலன்ஸ் விமானி பணி ஏற்க வந்தால், அவரை வரவேற்க தயாராக இருப்பதாக லண்டன் ஆம்புலன்ஸ் சர்வீஸ் அதிபர் காரட் எமர்சன் கூறி உள்ளார்.