அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை
                  
                     01 Apr,2020
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	
	அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையிலான அணு ஆயுத பேச்சு வார்த்தையில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. வடகொரியா அணு ஆயுதங்களை முழுமையாக கைவிட வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தும் நிலையில் தங்கள் நாட்டின் மீதான பொருளாதார தடைகள் அனைத்தையும் திரும்ப பெற வேண்டுமென வடகொரியா கூறுகிறது.
	
	இந்த நிலையில் இந்த மாத தொடக்கத்தில் இருந்து வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இது தொடர்பாக கடந்த வாரம் நடைபெற்ற ஜி7 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் மாநாட்டின் போது பேசிய அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ வடகொரியா மீது மேலும் பொருளாதார தடைகள் விதிக்க சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.
	இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மைக் பாம்பியோவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள வடகொரியா, அணு ஆயுத பேச்சுவார்த்தையை நடத்த அமெரிக்க விரும்பவில்லை என குற்றம் சாட்டி உள்ளது.
	இது வடகொரியா அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
	அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோவின் பொறுப்பற்ற கருத்துகள் அணு ஆயுத பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதில் அமெரிக்காவுக்கு விருப்பம் இல்லை என்பதை தெளிவாக காட்டுகிறது. இதே போக்கு நீடித்தால் பேச்சுவார்த்தையில் இருந்து முழுமையாக வெளியேறி நம்முடைய பாதையில் நாம் நடப்போம் அதோடு அமெரிக்கா நம் மக்கள் மீது சுமத்தியுள்ள வலிகளை இப்போது திருப்பிச்செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.