எங்களுக்கு உதவுங்கள் மருத்துவ தன்னார்வலர்களிடம் உதவி கேட்ட நியூயார்க் கவர்னர்
                  
                     31 Mar,2020
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	
	அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. 1.5 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3164 பேர் பலியாகி உள்ளனர். குறிப்பாக நியூயார்க் நகரில் 1200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போதுள்ள நிலை நீடித்தால் அடுத்த இரண்டு வாரங்களில் உயிரிழப்பு உச்சத்தை அடையும் என்று அதிபர் டிரம்ப் கவலை தெரிவித்துள்ளார். எனவே, கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமடைந்துள்ளன.
	நியூயார்க் நகரில் உள்ள தற்போதைய நெருக்கடியானது, நாடு முழுவதும் உள்ள பிற சமூகங்கள் விரைவில் எதிர்கொள்ளக்கூடிய நிலைமையின் முன்னோட்டம் என நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரூ குவாமோவும், சுகாதார அதிகாரிகளும் எச்சரித்துள்ளனர்.
	‘நிலைமை தீவிரமடைந்துள்ளதால், நெருக்கடியைச் சமாளிக்க கூடுதலாக 10 லட்சம் சுகாதாரப் பணியாளர்கள் தேவை. மருத்துவ தன்னார்வலர்கள் உடனடியாக முன்வந்து உதவி செய்ய வேண்டும். தயவு செய்து நியூயார்க் வந்து எங்களுக்கு உதவுங்கள்’ என நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரூ குவாமோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
	ஆளுநர் வேண்டுகோள் விடுப்பதற்கு முன்பே, நியூயார்க்கில் 80,000 க்கும் மேற்பட்ட முன்னாள் செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் பிற தொழில் வல்லுநர்கள் தன்னார்வத் தொண்டு செய்ய முன்வந்தனர். மேலும் 1000 படுக்கைகளுடன் அவசர கால மருத்துவமனையாக மாற்றப்பட்ட கடற்படை கப்பலும் வந்து சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.