கரோனா வைரஸ் தாக்கம் மேலும் மோசமடைந்தால் 2 லட்சம் பேர் மரணமடையலாம்:
30 Mar,2020
கரோனா வைரஸ் உலக அளவில் மகாபெரிய கொள்ளை நோயாகியுள்ளது. தாக்கம் சற்று குறைவதாகத் தெரிந்தாலும் உலக அளவில் 7,21, 903 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் 33,965 பேர் மரணமடைந்துள்ளனர். நோயிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,51, 312 ஆக உள்ளது. இந்நிலையில் அடுத்த 2 வாரங்களில் கரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்தால் அமெரிக்காவில் மட்டும் சுமார் 2 லட்சம் பேர் மரணிக்கலாம் என்று வெள்ளை மாளிகை எச்சரிக்கை கணிப்பு மேற்கொண்டுள்ளது.
அமெரிக்காவில் கரோனா வைரஸ் ஒருங்கிணைப்பாளரும் பெரிய மருத்துவ நிபுணருமான அந்தோனி ஃபாஸி வெள்ளை மாளிகையில் இது தொடர்பாகக் கூறும்போது, “நாம் கட்டுப்படுத்தாவிட்டால் நிச்சயம் இது நடக்கும், 2 வாரங்களில் 2 லட்சம் அமெரிக்கர்கள் பலியாவார்கள். நாம் இந்தத் துயரம் நடக்காமல் இருக்க அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம்” என்றார்.
கரோனா வைரஸ் எதிர்வினை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் டெபோரா பர்க்ஸ் கூறும்போது, 1 லட்சம்-2 லட்சம் மரணங்கல் என்பது சமூக விலகல் எந்த அளவில் இருந்து வருகிறது என்பதைப் பொறுத்த முற்கோளாகும் என்றார். ஆனால் இந்த மாதிரி கணிப்புகள் தவறாகக் கூடப் போகலாம், என்கிறார் டாக்டர் பர்க்ஸ்.
அதே வேளையில் இந்த மாதிரி கணிப்புகளைக் கண்டு அமெரிக்கர்கள் ‘மேலதிகமாக கவலையடைய வேண்டியதில்லை’ என்று டாக்டர் ஃபாஸி ஆறுதல் கூறியுள்ளார். மாதிரிக்கணிப்புகள் என்பது ஒரு முற்கோள் அல்லது கணிப்பு மட்டுமே என்கிறார் அவர்.
அதிபர் ட்ரம்ப் இந்த எச்சரிக்கை கணிப்பு குறித்துக் கூறும்போது, “ சமூக விலகலைக் கடைப்பிடிக்கவில்லையெனில் 2.2 மில்லியன் மக்கள் பலியாவார்கள், இதனை ஒருலட்சமாகக் குறைத்தாலும் கூட இதுவே பயங்கரமான எண்ணிக்கைதான், ஆனாலும் இப்படிக்குறைத்தால் நாம் நல்ல பணியை மேற்கொண்டிருக்கிறோம் என்று பொருள்.
இதனையடுத்து அமெரிக்காவில் சமூக விலகல் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்ப் மேலும் ஆறுதல் செய்தியாகக் கூறுகையில், “ஜூன் 1ம் தேதி நாம் இதிலிருந்து மீளும் பாதைக்குத் திரும்புவோம்” என்றார்.
ஞாயிறன்று அமெரிக்க மரண எண்ணிக்கை 2,300-ஐக் கடந்தது, 135, 000 பேர் கரோனா தொற்றினால் அவதிப்பட்டு வருகின்றனர்.
கரோனா மையமான நியூயார்க் நகரம், நியூயார்க் மாகாணம், நியு ஜெர்சி, கனெக்டிகட் ஆகிய இடங்களில் இருப்பவர்கள் அனாவசியமாக பயணங்களை மேற்கொள்ள 14 நாட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்கில் இந்த கரோனா வைரஸ் ‘வறண்ட புல்லில் தீ பரவுவது போல்’ பரவுகிறது என்று கவர்னர் ஆண்ட்ரூ குவோமோ கவலை வெளியிட்டுள்ளார்.
டாக்டர் ஃபாஸி நம்பிக்கை தெரிவிக்கும் போது, “இப்போது கைவசம் இருக்கும் சிகிச்சை மூலம் முழு அளவில் இல்லாவிட்டாலும் பகுதி அளவில் கரோனா பரவலை தடுத்து ஆட்கொள்ள முடியும்” என்றார்.