உலகெங்கும் கொரோனா – வடகொரியா ஏவுகணை சோதனை
29 Mar,2020
கொரோணா வைரஸ் பரவலால் உலக நாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ள நிலையில், வட கொரியா ஏவுகணைப் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளது.
வட கொரியாவின் இரண்டு குறுந்தூர ஏவுகணைகள் இவ்வாறு பரிசோதிக்கப்பட்டுள்ளன.
குறித்த இரண்டு ஏவுகணைகளும், வட கொரியாவின் கிழக்கு கடற் பிராந்தியத்தை நோக்கி ஏவப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை உலகில் கொரோனா வைரஸ் தாக்கம் அதி தீவிரமான விளைவுகளை ஏற்படுத்தி வரும் நிலையில், வட கொரியாவின் குறித்த நடவடிக்கை முறையற்ற செயற்பாடு என தென் கொரியா விசனம் வெளியிட்டுள்ளது.
வட கொரியாவின் வொண்சன் கடற்பிராந்தியத்தில் இருந்து ஏவப்பட்ட, குறித்த இரண்டு ஏவுகணைகளும் ஏறக்குறைய 230 கிலோமீட்டர்களுக்கு அப்பால் சென்று வீழ்ந்துள்ளதாக உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை குறித்த ஏவுகணை பரிசோதனை பரிசோதனை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சு, குறித்த ஏவுகணைகள் ஜப்பானின் ஆளுகைக்குட்பட்ட பிராந்தியத்துக்குள்ளோ அல்லது ஜப்பானின் பொருளாதார வலையத்துக்குள்ளோ வீழ்த்தப்படவில்லை என தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையினால் வட கொரியா ஏவுகணை பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த நடவடிக்கைகள் தொடர்பான பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.