கொரோனாவால் அதிகம் பாதித்த ஹூபே மாகாணத்தில் வன்முறை
28 Mar,2020
கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட சீனாவில் நோய்த்தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவின் ஹூபே மாகாணத்தில் இருந்துதான் இந்த நோய் பரவத் தொடங்கியது. ஒருகட்டத்தில் வைரஸ் தீவிரமாக பரவி, மக்கள் கொத்துக்கொத்தாக உயிரிழந்தனர். அதன்பின்னர் ஊரடங்கு உத்தரவு மற்றும் நவீன அறிவியல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கொரோனா வைரசை கட்டுப்படுத்தி உள்ளனர்.
கொரோனா வைரசின் மையமாக திகழ்ந்த ஹூபே மாகாணத்தில் தற்போது இயல்பு நிலை திரும்பி வருவதால் 2 மாதங்களுக்கு பிறகு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. மக்கள் வெளியில் நடமாடத் தொடங்கி உள்ளனர். பேருந்து போக்குவரத்தும் தொடங்கி உள்ளது.
இந்நிலையில், ஹூபே மாகாணத்தில் இருந்து பொதுமக்கள் சாரை சாரையாக வெளியேற முயற்சி செய்வதால் புதிய பிரச்சனை கிளம்பி உள்ளது. பேருந்துகளிலும், ரெயில்களிலும் கூட்டம் அலைமோதுகிறது.
போலீசார் தடுப்பதால் வன்முறை வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எல்லையில் உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி, சாலைகளை திறந்து வெளி மாநிலங்களுக்கு செல்ல அனுமதிக்கும்படி மக்கள் வலியுறுத்துவதால் பிரச்சனை வெடித்துள்ளது.
ஹூபே மாகாணத்துடன் ஜியாங்சி மாகாணத்தை இணைக்கும் பாலத்திலும் மோதல் ஏற்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோக்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகி உள்ளது.