வுஹானில் 9 வாரங்களின் பின்னர் பஸ் சேவை ஆரம்பம்: தமது ஆரோக்கியத்தை உறுதிசெய்ய பயணிகளுக்கு விசேட குறியீடு
27 Mar,2020
கொரோனா தொற்று நோய் காரணமாக 9 வாரங்கள் முடக்கப்பட்டிருந்த வுஹான் நகரில் பஸ் சேவை நேற்றுமுன்தினம் புதன்கிழமை மீண்டும் ஆரம்பமானது.
ஹன்கௌ ரயில் நிலையத்துக்கு அருகில் இருந்து முதலாவது பஸ் வண்டி நேற்றுமுன்தினம் அதிகாலை 5.25 மணிக்கு தனது சேவையை ஆரம்பித்தது.
இன்றைய தினம் மொத்தமாக 117 பாதைகளில் பஸ் செவைகள் நடத்தப்பட்டதாகவும் இது நகரின் மொத்த பஸ் சேவைகளில் 30 வீதம் எனவும் மாநகர போக்குவரத்துப் பிரிவு தெரிவித்தது.
சாரதியை விட ஒவ்வொரு பஸ் வண்டியிலும் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார். சகல பயணிகளும் தங்களிடம் உள்ள கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்தி கியூ ஆர் குறியீட்டின் மூலம் தங்களது தேகாரோக்கியத்தை உறுதி செய்த பின்னரே பஸ் வண்டியில் பயணிக்கலாம். இதனை கண்காணிப்பதே பாதுகாப்பு உத்தியோத்தரின் கடமையாகும்.
தேகாரோக்கியத்துக்கான குறியீடு இல்லாத பயணிகள் தங்களது வதிவிட சமூக அமைப்பினால் வழங்கப்பட்ட தேகாரோக்கியத்தை உறுதி செய்யும் சுகாதார சான்றிதழைக் கொண்டு செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சகல பயணிகளும் முகக்கவசங்கள் அணிவதுடன் கிருமிகள் தொற்றுவதைத் தடுக்கும் வகையில் ஒவ்வொரு பயணியும் இடைவெளிவிட்டு பஸ்வண்டியில் அமரவேண்டும்.
பஸ் சாரதியும் பாதுகாப்பு உத்தியோகத்தரும் ஒவ்வொரு நாளும் தங்களுக்கு காய்ச்சல் இல்லை என்பதை உறுதி செய்வதற்கான ஸ்க்ரீன் பரிசோதனைக்கு உள்ளாக வேண்டும். அத்துடன் அவர்கள் முகக்கவசம், கையுறைகளையும் அணிந்திருக்க வேண்டும். பஸ்வண்டிக்குள் இயற்கைக் காற்று புகும்வகையில் யன்னல்களை அவர்கள் திறந்துவிடவேண்டும்.
ஒவ்வொரு பயண முடிவிலும் அவர்கள் பஸ்வண்டியை சுத்தம் செய்து விஷக்கிருமிகளை அழிக்க வேண்டும்; என அறிவுறுத்தப்பட்டிருந்தது.