உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆயிரம்
                  
                     26 Mar,2020
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோன வைரஸ், உலகம் முழுவதையும் பீதிக்குள்ளாகியிருக்கிறது.  வைரசின் பிறப்பிடமான சீனாவை விட இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில் கொரோனா வைரஸ் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.   சீனாவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகக் கூறப்பட்ட கொரோனா வைரஸ், மீண்டும் அங்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
	சீனாவில் புதிதாக 67 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரு நாளில் 6 பேர் சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அதேபோல், கொரோனா வைரசால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இத்தாலியில் , புதிதாக 5,210 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 683 பேர் உயிரிழந்துள்ளனர்.
	வல்லரசு நாடான அமெரிக்காவும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது. அமெரிக்காவில் நேற்று ஒரு நாளில் மட்டும் 11,192 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஒட்டு மொத்தமாக 68 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வைரஸ் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். ஒட்டு மொத்தமாக அமெரிக்காவில் 944 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
	ஸ்பெயினும் கொரோனா வைரஸ் பாதிப்பால் நிலைகுலைந்துள்ளது. ஸ்பெயினில் புதிதாக 7,457 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக ஸ்பெயினில் 49 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,647 பேர் உயிரிழந்துள்ளனர்.
	 உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. தற்போது வரை  உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 468,905 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  114,218 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டுள்ளனர்.