சீனாவில் பரவும் தொற்று உலகுக்கு அடுத்த அச்சுறுத்தலாக மாறுமா?
25 Mar,2020
உலகம் முழுக்க கொரோனா வைரஸ் குறித்த அச்சம் ஆட்டிப்படைத்து வரும் நிலையில், சீனாவில் ஹண்டா வைரஸ் என்ற வகை தொற்று நோயால் ஒருவர் பலியாகியிருப்பது பலரை அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறது.
கடந்த திங்கட்கிழமையன்று சீனாவின் ஷாங்ஷி பிராந்தியத்தில் , சக தொழிலாளர்கள் 32 பேருடன் பேருந்தில் பணிக்கு சென்று கொண்டிருந்த நபர் ஒருவருக்கு வழியிலேயே உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் ரத்த மாதிரிகளை பரிசோதித்து பார்த்ததில் அவருக்கு ஹண்டா வைரஸ் என்ற தொற்று நோய் இருப்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து அவருடன் பேருந்தில் பயணம் செய்த 32 பேருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டத்தில், அவர்கள் யாருக்கும் இந்த வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
தற்போது உலகமே கொரோனா அச்சத்தில் மூழ்கியிருக்கும் நேரத்தில் மற்றொரு புதிய வைரசினால் ஒருவர் உயிரிழந்திருப்பதால் இந்த செய்தி உலகம் முழுக்க வைரலாக பரவியது. என்ற ஹாஷ்டாக் மூலம் பலரும் சமூக வலைத்தளங்களில் இது குறித்த கவலையை வெளிப்படுத்தியிருந்தனர். ஆனால் ஹண்டா வைரஸ் என்றால் என்ன? அது எப்படி பரவுகிறது? கொரோனாவைப் போல அதன் தாக்கம் இருக்குமா? என்ற கேள்விகளுக்குப் பலருக்கும் தெளிவான பதில் கிடைக்கவில்லை.
அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் அறிக்கையின்படி, இந்த வைரஸ் எலிகள் மூலம் பரவுகிறது. ஹண்டா வைரஸால் பாதிக்கப்பட்ட எலியின் எச்சில் அல்லது கழிவுகளைத் தொடும் ஒருவர், தனது கைகளை கழுவாமல், நேரடியாக தனது முகத்தைத் தொட்டால் அவருக்கு இந்த வைரஸ் பரவும் வாய்ப்புகள் அதிகம். ஆனால் மனிதர்களில் இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதாகப் பரவாது. இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதைக் கண்டறிய ஒரு வாரம் முதல் எட்டு வாரங்கள் வரை ஆகும்.
இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட நபருக்குக் காய்ச்சல், ஜலதோஷம், உடல் வலி,வாந்தி ஆகியவை ஏற்படும். சரியான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், பாதிக்கப்பட்ட நபரின் நுரையீரலில் நீர் கோர்த்து சுவாசப்பிரச்சனைகள் ஏற்படும். பின்னர் பாதிக்கப்பட்ட நபரின் நுரையீரல், சிறுநீரகம் ஆகியவை பாதிக்கப்பட்டு மரணம் கூட நிகழலாம்.
ஹண்ட வைரஸ் புதிதாக உருவான வைரஸ் கிடையாது. உலகின் பல்வேறு பகுதிகளில் இதன் தொற்று ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
கடந்தாண்டு ஜனவரி மாதம், தென் அமெரிக்காவில் உள்ள பட்டகோனியா என்ற பகுதிக்கு சென்ற சுற்றுலா பயணிகளில் ஒன்பது பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டனர். அதன் பிறகு அங்கு நடத்தப்பட்ட பரிசோதனைகளில் 60 பேருக்கு ஹண்டா வைரஸ் தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. அவர்கள் 50 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
ஹண்டா வைரஸின் இறப்பு விகிதம் 38 சதவிகிதம் எனவும் அதற்கு தற்போது வரை தடுப்பு மருந்து ஏதும் கண்டறியப்படவில்லை எனவும் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் ஹண்டா வைரஸ் ஒரு தொற்று நோயாக இருந்தாலும், அது அவ்வளவு எளிதாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவாது எனவும் உயிரியல் அறிஞர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து குளோபல் டைம்ஸ் இணையதளத்திடம் பேசிய வூஹான் பல்கலைக்கழக உயிரியல் நிபுணர் யாங் ஷங்யூ,'' ஹண்டா வைரஸ் உள்ள ஒருவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தாலே மற்றொருவருக்கு இந்த வைரஸ் பரவாது. மேலும் ஒரே நேரத்தில் கொரோனா வைரஸும், ஹண்டா வைரஸும் ஒருவரை தாக்க வாய்ப்பில்லை. கொரோனா வைரஸை போல, ஒருவரின் சுவாச மண்டலம் மூலமாக ஹண்டா வைரஸ் பரவாது. ஆனால் ஹண்டா வைரஸ் தொற்று ஏற்பட்ட மனிதரின் கழிவுகள் அல்லது ரத்தம் மூலமாக இது மற்றொருவருக்கு பரவும்.'' என விளக்கமளித்துள்ளார்.
பொதுவாக இந்த வைரஸ் கிராமப்புறங்களில் மே மற்றும் ஜூன் மாத இடைவெளியிலும், அக்டோபர் மற்றும் டிசம்பர் மாத இடைவெளியிலும் அதிகம் காணப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்