தவிக்கும் இத்தாலிக்கு கரம் கொடுக்கும் ரஷ்ய இராணுவம்
23 Mar,2020
இத்தாலியில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ரஸ்யா தனது இராணுவத்தினை அனுப்பவுள்ளதாக ரஷ்ய பாதுகாப்புச் செயலகம் தெரிவித்துள்ளது.
சீனாவின் ஹூபே மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட கொவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் சீனாவில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தி ஏனைய நாடுகளுக்கும் பரவ ஆரம்பித்தமையினைத் தொடர்ந்து, குறித்த வைரஸினால் பாரியளவில் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் இத்தாலி காணப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மட்டுமே இத்தாலியில் 793 உயிரிழப்புகள் பதிவாகியிருந்தன. தொடர்ந்து வைரஸ் தாக்கம் அந்நாட்டில் மிக வேகமாகப் பரவிவரும் நிலையில், குறித்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, இத்தாலிக்கு உதவுவதற்காக ரஷ்ய இராணுவம் இத்தாலிக்கு அனுப்பப்படவுள்ளது. ரஷ்ய ஜனாதிபதி நேற்று ரஷ்ய பாதுகாப்புச் செயலகத்தை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு வழங்கிய உத்தரவுக்கு அமைய குறித்த இராணுவப் படை இத்தாலிக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் இன்று ஞாயிற்றுக்கிழமை இப்படையினர் இத்தாலிக்கு பயணமாகின்றனர் எனவும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இத்தாலி பிரதமருக்கும் ரஷ்ய ஜனாதிபதிக்கும் நேற்றைய தினம் நடைபெற்ற தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து குறித்த இராணுவ உதவியினை வழங்குவதற்கு விளாடிமிர் புட்டின் தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவித்துள்ளன.
மேலும் இராணுவத்தின் பயணிகள் விமானம் மூலம், இராணுவ மருத்துவப் பிரிவின் எட்டு படைக்குழுக்கள் அனுப்பப்படவுள்ளதாகவும் கிருமி நீக்கத்துக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் மற்றும் ஏனைய மருத்துவ உபகரணங்கள் ஆகியவையும் அனுப்பப்படவுள்ளதாகவும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ரஷ்யாவில் இதுவரை வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ள 306 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.