அனுபவ மருத்துவர்கள்.. உபகரணங்கள்! -நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர இத்தாலிக்கு உதவும் சீனா
23 Mar,2020
கொரோனா வைரஸ் தடுப்பில், இத்தாலிக்கு உதவும் சீனா!
கொரோனா வைரஸால் சீனாவில் 80, 894 பேர் பாதிக்கப்பட்டு, 3,237 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவைத் தொடர்ந்து அதிக உயிரிழப்பு இத்தாலியில் ஏற்பட்டுள்ளது. இத்தாலியில் 41, 506 பேர் பாதிக்கப்பட்டு, 3, 405 பேர் உயிரிழந்துள்ளனர்.
இத்தாலியில் வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இருந்தபோதிலும் வைரஸ் பாதிப்பால் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தவண்ணமே உள்ளது.
கடந்த நாளில் குறிப்பிட்ட 24 மணி நேரத்தில் இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 345 பேர் பலியாகி உள்ளனர். 3,000-க்கும் அதிகமானவர்கள் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நோய்ப்பரவல் ஒரு பக்கம் இருக்க, தேவையான எண்ணிக்கையில் படுக்கைகள் இல்லாததால், 80-95 வயதில் உள்ள முதியவர்கள், சுவாசக் கோளாறு பாதிப்புடையவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்ற அதிர்ச்சித் தகவலும் வருகிறது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இத்தாலி முழுக்கப் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மக்கள் தாங்கள் வசிக்கும் இடங்களை விட்டு மற்ற இடங்களுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசரத் தேவை தவிர வேறு எக்காரணம் கொண்டும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வளவு கட்டுப்பாடுகள் இருந்தும் இத்தாலியில் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருவது, நாட்டின் சுகாதாரத்துறையைத் திணறடித்து வருகிறது. இந்நிலையை ‘ரேஸ் அகைன்ஸ்ட் டைம் (race against time)’ என்கிறார்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள்.
‘நோயாளிகளின் எண்ணிக்கை குறையவில்லை என்றால் நிலைமை மோசமாகலாம்’
இந்நிலையில், இத்தாலியில் நடைபெற்று வரும் கொரோனா போரில் பங்குபெற, சீனாவிலிருந்து தேவையான மருத்துவர்கள், சிகிச்சை உபகரணங்கள் மற்றும் பொருள்களை உதவியாகப் பெற்றுள்ளது இத்தாலி. சீனாவிலிருந்து சிறப்பு மருத்துவர்களும் மருத்துவ உபகரணங்களும் இத்தாலியில் தரையிறங்கியுள்ள நிலையில், இரு நாடுகளின் இந்த முன்னெடுப்பு, உலகம் முழுக்க கவனம்பெற்றுள்ளது.
சீனாவின் ஹூபே மாகாணத்தில் 3,000க்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற கொடிய வைரஸைக் கட்டுக்குள் கொண்டுவர களத்தில் பணியாற்றிய அனுபவமிக்க மருத்துவர்கள், இப்போது இத்தாலிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ‘எங்கள் மருத்துவர்கள் திறன் பெற்றவர்கள். எனினும், சீன மருத்துவர்கள்தான் முதலில் வைரஸுக்கு சிகிச்சையளித்தவர்கள் என்பதால், அவர்களின் அனுபவத்தைக்கொண்டு எங்களுக்கு உதவ இயலும்’ என்று இத்தாலிய மந்திரி லூய்கி டிஐ மாயோ (Luigi Di Maio) தெரிவித்துள்ளார்.
இத்தாலியில் தற்போது 41,000க்கும் மேற்பட்டவர்களுக்குக் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தினம் தினம் இந்த எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இத்தாலியில் அதிக பாதிப்புக்குள்ளான பகுதிகளில் ஒன்றான லோம்பார்டியில், 80% அக்குட்-கேர்(acute-care) படுக்கைகள் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஒதுக்கப்பட்டுள்ளன. சுகாதாரத்துறை உயர் அதிகாரி கியூலியோ கல்லேரா, ‘நோயாளிகளின் எண்ணிக்கை குறையவில்லை என்றால் நிலைமை மோசமாகலாம்’ என்று கூறியிருக்கிறார்.
அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கை, மருத்துவப் பொருள்கள் மற்றும் வென்டிலேட்டர் போன்ற முக்கிய உபகரணங்கள் தட்டுப்பாடு என்று இக்கட்டான நிலையிலிருக்கும் இத்தாலிக்கு,
சீனா ஒப்புக்கொண்ட உதவிகள்!
10,000 வென்டிலேட்டர்களுக்கான ஒப்பந்தங்கள், 2 மில்லியன் மாஸ்க்குகள் மற்றும் 20,000 பாதுகாப்பு சூட்கள், மருத்துவ உதவிகள்.