கொரோனா வைரஸ் இயற்கையானது,ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட உயிரியல் ஆயுதமல்ல; அமெரிக்க விஞ்ஞானிகள்!
20 Mar,2020
சீனாவின் உகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 8, 919-ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது.
ஒரே நாளில் இத்தாலியில் நேற்று 4,207 பேருக்கு ஏற்பட்ட நிலையில், 475 பேர் உயிரிழந்தனர். இதனால், இத்தாலியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 978-ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் உகான் நகரில் தோன்றியதால் சீனாவின் ரகசிய உயிரியல் ஆயுதத் திட்டத்துடன் தொடர்புடைய உகான் ஆய்வகத்தில் தோன்றியிருக்கலாம் என்று இஸ்ரேலிய உயிரியல் போர் நிபுணர் தெரிவித்து இருந்தார்
சீனாவின் மிக மேம்பட்ட வைரஸ் ஆராய்ச்சி ஆய்வகமான உகான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி குறித்த செய்தியை 2015 ஆம் ஆண்டு உள்ளுர் உகான் தொலைக்காட்சி முதலில் வெளியிட்டது, அதே செய்தியை ரேடியோ ஃப்ரீ ஆசியா இந்த வாரம் மறு ஒளிபரப்பியது. சீனாவில் ஆபத்தான வைரஸ்களை ஆய்வு செய்யும் திறன் கொண்ட ஒரே தளம் இந்த ஆய்வகமாகும்.
சீன உயிரியல் ஆயுதம் குறித்து ஆய்வு செய்த முன்னாள் இஸ்ரேலிய இராணுவ புலனாய்வு அதிகாரி டேனி ஷோஹாம் கூறும் போது
இந்த உகான் இன்ஸ்டிடியூட் சீனாவின் ரகசிய உயிரியல் ஆயுத திட்டத்துடன் தொடர்புடையது . இந்த இன்ஸ்டிடியூட்டில் உள்ள சில ஆய்வகங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் அடிப்படையில், சீன உயிரியல் ஆயுத திட்டத்துடன் குறைந்தபட்சம் தொடர்புடையது. ஆனால் சீன உயிரியல் போரின் முக்கிய அங்கமாக இல்லை. உயிரியல் ஆயுதங்களுக்கான பணிகள் உள்ளூர்-இராணுவ ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக நடத்தப்படுகின்றன என கூறி இருந்தார்.
கொரோனா வைரஸ் சீனாவின் உயிரியல் ஆயுதம் எனவும் சமூக வலைதளங்களிலும் பரவலாக பகிரப்பட்டது.
ஆனால் அமெரிக்க விஞ்ஞானிகளின் புதிய ஆய்வில் கொரோனா வைரஸ் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது அல்ல என்றும் கொரோனா இயற்கையான வைரஸ் என்றும் கண்டறியப்பட்டு உள்ளது
சீன விஞ்ஞானிகளால் முன்னர் வெளியிடப்பட்ட வைரஸின் மரபணு வரிசை தரவுகளின் அடிப்படையில், ஸ்கிரிப்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தில் நோயெதிர்ப்பு மற்றும் நுண்ணுயிரியல் துறையின் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் வைரஸ் ஒரு ஆய்வக கட்டுமானம் அல்லது வேண்டுமென்றே கையாளப்படுவது அல்ல என்று கண்டறியப்பட்டு உள்ளது.
மார்ச் 17 அன்று நேச்சர் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு கட்டுரையில் கொரோனாவின் மூலம் என்று அழைக்கப்படும் சார்ஸ் மற்றும் சிஓவி-2 (SARS-CoV-2) ஆகியவற்றில் இருந்து கொரோனா வைரஸ் தோன்றியிருக்கலாம் என கூறப்பட்டு உள்ளது.
சார்ஸ் மற்றும் சிஓவி-2 ஸ்பைக் புரதம் மனித உயிரணுக்களை பிணைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உண்மையில், விஞ்ஞானிகள் இது இயற்கையான வைரஸ் அமைப்பாகும், மரபணு பொறியியலின் தயாரிப்பு அல்ல என்று முடிவு செய்து உள்ளனர் என்று அறிவியல் மற்றும் ஆராய்ச்சி செய்திகள் குறித்த வலைத்தளமான சயின்ஸ் டெய்லி தெரிவித்துள்ளது.
சார்ஸ் மற்றும் சிஓவி-2 இன் மூலக்கூறு அமைப்பு வவ்வால்கள் மற்றும் பாங்கோலின்களைப் போன்றது என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்
கொரோனா வைரஸ் மரபணு வரிசை தரவுகளை ஒப்பிடுவதன் மூலம்,சார்ஸ் மற்றும் சிஓவி-2 இயற்கையாக உருவானது என்பதை நாங்கள் உறுதியாக தீர்மானிக்க முடியும்” என்று ஸ்க்ரிப்ஸ் ரிசர்ச்சில் நோயெதிர்ப்பு மற்றும் நுண்ணுயிரியல் இணை பேராசிரியரும், சயின்ஸ் டெய்லி பத்திரிகையின் ஆசிரியருமான கிறிஸ்டியன் ஆண்டர்சன் கூறி உள்ளார்.