கொரோனா: பிரான்ஸில் புதிய கட்டுப்பாடுகளை மதிக்காதவர்களுக்கு 135 யூரோக்கள் அபராதம்!
18 Mar,2020
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளை மதிக்காதவர்களுக்கு 135 யூரோ அபராதம் விதிக்கப்படுமென உட்துறை அமைச்சர் கிறிஸ்டோஃப் காஸ்டனர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த கட்டுப்பாட்டுகளை செயற்படுத்த 100,000 பிரான்ஸ் பொலிஸாரை நிலைநிறுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மேலும் நாடு முழுவதும் நிலையான சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும் எனவும் அமைச்சர் கிறிஸ்டோஃப் காஸ்டனர் குறிப்பிட்டுள்ளார்.
இதுதவிர, ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில், ‘மக்கள் வீட்டிலேயே இருக்கவேண்டும், அத்தியாவசிய நடவடிக்கைகளுக்கு மட்டுமே வெளியே செல்லவேண்டும். கட்டுப்பாடுகளை மீறும் எவரும் தண்டிக்கப்படுவார்கள்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஷெங்கன் மண்டலத்திற்குள் நுழைவதும் செவ்வாய்க்கிழமை முதல் மூடப்படும்.
நகராட்சித் தேர்தலின் இரண்டாவது சுற்றை மக்ரோன் ஒத்திவைத்தார். தற்போது நடைபெற்று வரும் அனைத்துச் சீர்திருத்தங்களும் இடைநிறுத்தப்படும். அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை நாடாளுமன்றத்தின் முன் கொண்டுவரும் என்று அவர் கூறினார்.
பிரான்ஸில் இதுவரை 148பேர் உயிரிழந்துள்ளதாக பிரான்சின் பொதுச் சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. நேற்று மட்டும் 21 புதிய இறப்புகள் பதிவாகியுள்ளன. இது 16 சதவீதம் அதிகரித்துள்ளது.
அத்துடன் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,633ஆக உயர்ந்துள்ளது. இது ஞாயிற்றுக்கிழமை 5,423ஆக இருந்தது. இது 24 மணி நேரத்தில் 20 சதவீதக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது