ஈரானுக்கு பொதுத் தனிமைப்படுத்தல் வேண்டாம்: ஹசன் ருஹானி வேண்டுகோள்!
17 Mar,2020
அமெரிக்காவின் பொருளாதார தடை மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்பால் தத்தளித்துவரும் ஈரானுக்கு, பொதுத் தனிமைப்படுத்தல் வேண்டாம் என ஜனாதிபதி ஹசன் ருஹானி தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டின் அனைத்து எல்லைகளையும் திறந்துவைக்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் 2015ஆம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகியதால், பொருளாதார தடைக்கு உள்ளாகியுள்ளதால் நாட்டின் பொருளாதார
செயற்பாடுகள் முடங்கி போயுள்ளன. அத்துடன் தற்போது கொடிய கொரோனா வைரஸ் நோய் பாதிப்புக்கும் சேர்த்து போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
ஈரானில், மூத்த துணைத் தலைவர், அமைச்சரவை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், புரட்சிகர காவல்படை உறுப்பினர்கள் மற்றும் சுகாதார அமைச்சக அதிகாரிகள் உட்பட பல மூத்த அதிகாரிகளுக்கு இந்த வைரஸ் தொற்றியுள்ள நிலையில் அரசாங்க செயற்பாடுகளும் போதிய வழிகாட்டுதல் இன்றி ஸ்தம்பித்துள்ளது.
கடந்த வாரம், ஈரான் சர்வதேச நாணய நிதியத்திடம், 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் கேட்டது, 1979ஆம் ஆண்டு இஸ்லாமியப் புரட்சிக்கு முன்னர் முதல் சர்வதேச கடன் பெற்ற பிறகு இதுவரை எந்தவித கடனையும் எதிர்பாராத நாடாக விளங்கிய ஈரான் தற்போது பொருளாதார நெருக்கடியில் மீண்டும் கடன் கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது கொடிய வைரஸை கட்டுப்படுத்தமுடியாமல் சமாளிக்க வழியின்றி ஈரான் அரசு கடுமையாக தத்தளித்து வருகிறது