மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இருந்து அதன் இணை நிறுவனர் பில் கேட்ஸ் விலகி உள்ளார். அவர் பொதுத்தொண்டாற்றுவதில் கூடுதல் நேரம் செலவிட முடிவு செய்துள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டன் ரெட்மாண்ட் நகரை தலைமையகமாக கொண்டு செயல்படுகிற உலகின் முன்னணி, பன்னாட்டு மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம், மைக்ரோசாப்ட் ஆகும். இந்த நிறுவனத்தை 1975-ம் ஆண்டு, பில்கேட்ஸ், பால் ஆலன் என்பவருடன் சேர்ந்து தொடங்கினார். பால் ஆலன், 2018-ம் ஆண்டு மரணம் அடைந்து விட்டார்.
பில்கேட்ஸ் தொடர்ந்து 2000-ம் ஆண்டு வரையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்தார். அதன்பின்னர் ஸ்டீவ் பால்மர் தலைமை செயல் அதிகாரி ஆனார். அவரைத் தொடர்ந்து இந்தியாவின் சத்ய நாதெள்ளா, 2014-ம் ஆண்டு தலைமை செயல் அதிகாரி பொறுப்புக்கு வந்தார்.
இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் பில் கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இருந்து விலகி உள்ளார். இது உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
64 வயதான பில் கேட்ஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இருந்து விலகிய போதும், தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெள்ளாவிற்கும், பிற அதிகாரிகளுக்கும் தொடர்ந்து ஆலோசகராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பில் கேட்ஸ் கூறுகையில், “ எனது வாழ்வில் மைக்ரோசாப்ட் எப்போதுமே முக்கிய அங்கமாக திகழ்ந்து வருகிறது. அதன் தலைமையுடன் தொடர்ந்து செயல்படுவேன்” என கூறி உள்ளார்.
பில் கேட்ஸ், உலகளாவிய சுகாதாரம், வளர்ச்சி, கல்வி, பருவநிலை மாற்றம் தொடர்பான பொதுத்தொண்டுகளில் கூடுதல் நேரத்தை செலவிட முன் வந்துதான், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இருந்து வெளியேறி உள்ளார்.
பில்கேட்சுக்கும், அவரது மனைவி மெலிந்தா கேட்சுக்கும் அள்ளி அள்ளி கொடுக்கும் உள்ளம். பொது நல சேவையில் தங்களை மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபடுத்தி வருகின்றனர். இதற்காக 2008-ம் ஆண்டு மெலிந்தா கேட்ஸ் அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கினர்.
2018-ம் ஆண்டு இந்த தம்பதியர், உலகின் மிகச்சிறந்த கொடையாளிகளாக ‘தி குரோனிகல் ஆப் பிலாந்திரபி’ அமைப்பினால் தேர்வு செய்யப்பட்டனர். அந்த ஆண்டில் இந்த தம்பதியர் தங்கள் அறக்கட்டளைக்கு 4.8 பில்லியன் டாலர் (சுமார் ரூ.35 ஆயிரத்து 40 கோடி) நன்கொடை வழங்கியதால் இந்த சிறப்பை பெற்றனர்.
உலகின் இரண்டாவது பெரிய பணக்காரர் என்ற பெயரைப்பெற்றுள்ள பில்கேட்சின் சொத்து மதிப்பு 103.6 பில்லியன் டாலர் (சுமார் ரூ.7 லட்சத்து 56 ஆயிரத்து 280 கோடி) ஆகும்.
இயக்குனர் குழுவில் இருந்து விலகியுள்ள பில் கேட்சுக்கு நன்றி தெரிவித்து, மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்ய நாதெள்ளா ஒரு அறிக்கை விடுத்துள்ளார்.
அதில் அவர், “கணினி மென்பொருள் துறையில் மிகப்பெரிய நம்பிக்கை வைத்து, சமூகத்தை அழுத்தும் மிகப்பெரிய சவால்களை தீர்க்கும் ஆவலுடன்தான் பில் கேட்ஸ் இந்த நிறுவனத்தை தொடங்கினார். பில் கேட்சிடம் இருந்து இந்த நிறுவனம் தொடர்ந்து பலன் அடையும். அவர் தொழில் நுட்ப ஆலோசகராக தொடர்வார். அவரது நட்புக்காக நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன். அவருடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றுவதை எதிர்நோக்குகிறேன்” என கூறி உள்ளார்.