உலக மக்களிடம் தெரிவிக்காமல் விமர்சனங்களை திசைதிருப்ப சீனா முயற்சி:
15 Mar,2020
உலகளாவிய தொற்றுநோயை உருவாக்கிவிட்டு அதைபற்றி உலக மக்களிடம் தெரிவிக்காமல் விமர்சனங்களை திசைதிருப்ப சீனா முயற்சி செய்வதாக அமெரிக்கா கூறியுள்ளது.
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸை பரப்பியது அமெரிக்கா தான் என சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் ஷீஹொ லிஜியன் அண்மையில் கூறியிருந்த நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா இந்த கருத்தினை குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உலகளாவிய தொற்றுநோயை உருவாக்கிவிட்டு அதைபற்றி உலக மக்களிடம் தெரிவிக்காமல் விமர்சனங்களை திசைதிருப்ப சீனா முயற்சி செய்கிறது.
சதி கோட்பாடுகளை போலியாக பரப்புவது முட்டாள்தனமானது மட்டுமல்லாமல் ஆபத்தானது. சீன மக்கள் மற்றும் உலகத்தின் நன்மைக்காக சீன அரசின் இந்த கருத்தை ஒருபோதும் சகித்துக்கொண்டு இருக்கமாட்டோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்காவில் உள்ள சீன தூதருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் சீனாவுக்கு வெற்றி: 65,541பேர் குணமடைந்துள்ளதாக தகவல்!
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொற்று தற்போது, அங்கு சிறந்த முறையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், தற்போது சீனாவுக்கு வெளியே அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பாக இத்தாலி, ஈரான், தென்கொரியா மற்றும் அமெரிக்க நாடுகளில் கொரோனா வைரஸ், மிக வேகமாக பரவிவருகின்றது.
இந்தநிலையில், சீனாவில் புதிய நோயாளிகள் வருகை மற்றும் இறப்பு வீதமும் கணிசமாக குறைந்துவிட்டதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சீனாவில் இதுவரை 80 ஆயிரத்து 824 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 3189 பேர் உயிரிழந்துள்ளனர். 12 ஆயிரத்து 94 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர். 65,541 பேர் குணமடைந்த நிலையில், மருத்துவமனைகளில் இருந்து வெளியேறியுள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) மட்டும் 1430 பேர் வெளியேறியுள்ளனர்.
நேற்று புதிதாக 11 பேருக்கு கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 7 பேர் வெளிநாடுகளுக்கு சென்று வந்த பிறகு பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் வெளிநாடுகளுக்கு சென்று வந்ததால் ஏற்பட்ட பாதிப்பு 95ஆக உயர்ந்துள்ளது. சீனாவில் நேற்று மேலும் 13 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் சீனாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3189ஆக உயர்ந்துள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது