வெறிச்சோடிப் போனது இத்தாலி: அனைத்து கடைகளையும் மூட அரசு உத்தரவு!
14 Mar,2020
இத்தாலியில் மருந்தகங்கள், மளிகைக் கடைகளைத் தவிர்த்து இதர அனைத்துக் கடைகளையும் மூட அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
இத்தாலியில் கோவிட்-19 தொற்றினால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மிகவேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தலாம் என நம்பப்படுகின்றது.
எனினும், இத்தாலியில் கோவிட்-19 வைரஸ் தொற்று அதிவேகமாகப் பரவி வருகிறது. அந்நாட்டில் இதுவரை 15,113 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1016 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இத்தாலி பிரதமர் கிசாபே கான்டி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு நேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில்,
“கோவிட்-19 வைரஸைக் கட்டுப்படுத்த இத்தாலி முழுவதும் மதுபான விடுதிகள், ஹோட்டல்கள், சலூன்கள் உட்பட அனைத்து கடைகளும் மூடப்படும். மருந்தகங்கள், மளிகை கடைகள் மட்டுமே செயற்படும்.
மளிகைப் பொருட்கள், மருந்துகளை வாங்க பொதுமக்கள் அவசரம் காட்ட வேண்டாம். போதுமான மளிகை பொருட்கள், மருந்துகள் இருப்பில் உள்ளன. இந்தக் கடைகள் 24 மணி நேரமும் செயற்படும். தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம்.
அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்ற அறிவுறுத்துகிறோம். நாட்டின் நலன்கருதி இந்த கட்டுப்பாடுகளை பொதுமக்கள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்” எனக் கூறினார்