பிலிப்பைன்ஸ் தூதருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் ஐ.நா. தலைமையகத்துக்கு அண்மையில் சென்றிருந்ததால், அங்கும் கொரோனா வைரஸ் புகுந்துள்ளது.
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலக தலைவர்களின் குடும்பத்தினர் முதல், சாதாரண தொழிலாளியின் குடும்பத்தினர் வரை பலருக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கு தினமும்ம் நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியாகி கொண்டிருக்கின்றன.
மாறாக சீனாவில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அங்கு வைரஸ் தொற்றுக்கு ஏற்படும் பலி மற்றும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது. சீனாவில் நேற்று 7 பேர் பலியான நிலையில், 8 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
உலக நாடுகளில் கொரோனா வைரசுக்கு பலியானோரின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதில் அதிகபட்சமாக சீனாவில் 3 ஆயிரத்து 176 பேர் பலியாகி உள்ளனர்.
அடுத்தபடியாக இத்தாலியில் ஆயிரத்து 16 பேரும், ஈரானில் 514 பேரும் உயிரிழந்துள்ளனர். 121 நாடுகளில் மொத்தம் 1 லட்சத்து 34 ஆயிரத்து 300 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தற்போது அதிக உயிரிழப்பை சந்தித்து வரும் இத்தாலியில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. மருந்து கடைகள் மற்றும் உணவகங்கள் தவிர பிற கடைகள் மூடப்பட்டுள்ளன. முக்கிய காரணங்களின்றி மக்கள் வீட்டை விட்டு வெளியேறக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரோம் நகரில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களும் மூடப்பட்டுள்ளன. அடுத்த (ஏப்ரல்) மாதம் 3-ந் தேதிக்கு பிறகுதான் தேவாலயங்கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பிலிப்பைன்ஸ் நாட்டு தூதர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள பிலிப்பைன்ஸ் தூதரகம் மூடப்பட்டுள்ளது. மேலும் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பிலிப்பைன்ஸ் தூதர் கடந்த 9-ந் தேதி நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. தலைமையகத்துக்கு சென்றுள்ளார். பின்னர் காய்ச்சல் அறிகுறி இருந்ததால் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அவர் ஐ.நா. தலைமையகத்துக்கு சென்றதன் மூலம் அங்கும் கொரோனா வைரஸ் புகுந்துள்ளது தெரியவந்துள்ளது.
கொரோனா வைரசால் அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளதாகவும், வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 1,400-ஐ தாண்டியுள்ளதாகவும் அங்குள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தரவு கூறுகிறது.
இந்த நிலையில் அமெரிக்காவின் மேரிலாந்து மற்றும் ஓகியோ மாகாணங்களில் பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி மேரிலாந்தில் வருகிற 27-ந் தேதி வரையும், ஓகியோவில் அடுத்த மாதம் 3-ந் தேதி வரையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தொடர்ந்து அமெரிக்காவில் முதன் முதலில் இந்த 2 மாகாணங்கள்தான் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பை வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.