துருக்கியில் இருந்து சட்டவிரோதமாக ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற சுமார் ஆயிரம் பேர் கிரீஸ் எல்லையில் தடுத்து நிறுத்தம்
11 Mar,2020
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் மிகவும் முக்கிய இடமான இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற அந்நாட்டு அரசுப்படைகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன. கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் மீதும் ரஷியா உதவியுடன் சிரியா ராணுவம் தாக்குதல் நடத்திவருகிறது. ஆனால், கிளர்ச்சியாளர்களுக்கு துருக்கி ஆதரவு அளித்து வருகிறது.
சிரியா மற்றும் துருக்கி என இரு நாடுகளுக்கும் இடையே நடந்த சண்டையில் 50-க்கும் அதிகமான ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், இட்லிப் மாகாணத்தில் நடைபெற்ற சண்டையை நிறுத்த ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன் ஒப்பந்தம் செய்துகொண்டனர். இதனால் கடந்த சில நாட்களாக இட்லிப் பகுதியில் எந்தவித தாக்குதல்களும் அரங்கேறவில்லை.
இந்த சண்டையில் நேட்டோ படைகள் தனக்கு ஆதரவு அளிக்காததால் துருக்கி தனது நாட்டில் உள்ள அகதிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல எந்த தடையும் இல்லை என அறிவிப்பை வெளியிட்டார். மேலும், ஐரோப்பிய நாட்டுகளுக்குள் நுழையும் எல்லைகளையும் திறந்தார்.
இதனால் ஆப்கானிஸ்தான், சிரியா, ஈரான் நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான அகதிகள் துருக்கியையும், ஐரோப்பாவையும் இணைக்கும் நாடாக உள்ள கிரீஸ் எல்லையை நோக்கி படையெடுத்தனர்.
அகதிகளின் எண்ணிக்கை அதிகமானதால் கிரீஸ் தனது எல்லைகளை அடைத்தது. மேலும், அகதிகள் தங்கள் நாட்டு எல்லைக்குள் நுழையவும் தடை விதித்தது.
ஆனாலும், அகதிகள் அத்துமீறி சட்ட விரோதமாக எல்லை வேலிகளை தாண்டி கிரீஸ் நாட்டிற்கு நுழைகின்றனர். இதனால், கிரீஸ் ராணுவத்தினர் இரு நாட்டு எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் துருக்கியில் இருந்து சட்ட விரோதமாக ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற 963 அகதிகள் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக கிரீஸ் நாட்டு பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
அகதிகளாக நுழைய முயன்றவர்களில் பெரும்பாலானோர் சிரியா, ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களாவர்.
சட்டவிரோதமாக கிரீஸ் நாட்டிற்குள் நுழைய முயன்றவர்களில் 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், எஞ்சியவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து கூடுதல் நிதி வாங்கவே துருக்கி தங்கள் நாட்டில் உள்ள அகதிகளை ஐரோப்பிய நாடுகளை நோக்கி அனுப்புவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.