அமெரிக்க ராணுவ விமானம் மீது லேசர் தாக்குதலா? - சீனா மறுப்பு
08 Mar,2020
தென் கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சின் குவாம் கடல் பகுதியில், அமெரிக்க ராணுவ விமானம் கடந்த மாதம் 17-ந் தேதி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தது. அப்போது அந்த கடல் பகுதிக்கு உரிமை கொண்டாடிவரும் சீனாவின் கடற்படையினர் அந்த விமானத்தின் மீது ‘லேசர்’ கதிர்வீச்சை பாய்ச்சி தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா கூறியது.
அமெரிக்க கடற்படையின் கண்காணிப்பு விமானம் மற்றும் பிற நாடுகளின் விமானங்களை சேதப்படுத்தி வீரர்களை காயப்படுத்துவதற்காக லேசர்களை பயன்படுத்தியதாக சீனா மீது அமெரிக்கா கடந்த வாரம் குற்றம் சாட்டியது.
இதை தற்போது சீன பாதுகாப்பு அமைச்சகம் மறுத்திருப்பதுடன், தங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது என்று கூறி உள்ளது.
இதுகுறித்து நேற்று முன்தினம் சீன பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரென் குவோகியாங் கூறுகையில், “சம்பவம் நடந்ததாக கூறப்படும் 17-ந் தேதி சர்வதேச கடற்பகுதியில் சீன படையினர் வழக்கமான பயிற்சியில்தான் ஈடுபட்டிருந்தனர். அப்போது சீன படைகளின் எச்சரிக்கையை மீறி, அமெரிக்காவின் பி-8ஏ போசிடான் விமானம் அங்கு தாழ்வாக பறந்து நீண்ட நேரம் வட்டமடித்தது. அமெரிக்க விமானத்தின் இந்த செயலானது நட்புறவை மீறுவதுடன், இரு தரப்பு கப்பல்கள், விமானம் மற்றும் வீரர்களின் பாதுகாப்பை கடுமையாக அச்சுறுத்தும் வகையில் இருந்தது” என்று குறிப்பிட்டார்.