ஒரு பக்கம் புதினுடன் சந்திப்பு... மறுபக்கம் டிரம்பிடம் ஆயுத உதவி - துருக்கி அதிபரின் வியூகம்
07 Mar,2020
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் மிகவும் முக்கிய இடமான இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற அந்நாட்டு அரசுப்படைகள் தீவிர முயற்சி மேற்கொண்டுவருகின்றன.
கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் மீதும் ரஷியா உதவியுடன் சிரியா ராணுவம் தாக்குதல் நடத்திவருகிறது. ஆனால், கிளர்ச்சியாளர்களுக்கு துருக்கி ஆதரவு அளித்துவருகிறது.
இதற்கிடையில் உள்நாட்டுப்போரில் தொடங்கிய சண்டை தற்போது நாடுகளுக்கு இடையேயான சண்டையாக உருவெடுத்துவருகிறது.
கடந்த சில வாரங்களாக நடைபெற்றுவரும் சண்டையில் சிரியா மற்றும் துருக்கி என இரு தரப்பிலும் 50-க்கும் அதிகமான ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
சிரிய போர் விமானத்தை துருக்கி படைகள் சுட்டுவீழ்த்துவதும் அதற்கு பதில் தாக்குதலும் என சண்டை நீண்டுகொண்டே போவதால் போர் பதட்டம் மேலும் அதிகரித்துள்ளது.
இந்த சண்டையில் சிரிய படைகளுக்கு ஆதரவு அளிக்கும் ரஷியா, கிளர்ச்சியாளர்களையும் துருக்கி படைகளையும் குறிவைத்து அதிரடி தாக்குதல்களை நடத்திவருகிறது.
இதற்கிடையில், துருக்கி தலைநகர் அங்காராவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு அதிபர் தாயிப் எர்டோகன் 'சிரிய போருக்கு அதிக ஆயுதம் தேவைப்படுவதால் அமெரிக்க அதிபர் டிரம்ப் எங்களுக்கு தேவையான உதவிகளை செய்யவேண்டும்’ என வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில், சிரிய விவகாரம் தொடர்பாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை துருக்கி அதிபர் தாயிப் எர்டோகன் நாளை மாஸ்கோவில் சந்திக்க உள்ளார்.
இந்த சந்திப்பின் போது இட்லிப் மாகாணத்தில் நடைபெற்று வரும் தாக்குதல்களை ரஷியா உடனடியாக நிறுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் துருக்கியில் அகதிகளாக உள்ள மக்களை மீண்டும் சிரியாவில் குடியமர்த்துவது தொடர்பாகவும் ஆலோசனைகள் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.