ஈரானில் கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 77 ஆக உயர்வு
04 Mar,2020
சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசால் உலகம் முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
சீனாவை தொடர்ந்து, தென்கொரியா மற்றும் ஈரானில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஈரானில் இந்த நோயால் கடந்த பிப்ரவரி 24ந்தேதி ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் அங்கு கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது.
இதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 26ந்தேதி 4 பேர் பலியாகினர். இதனால் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது. வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையும் 139 ஆக உயர்ந்திருந்தது.
தொடர்ந்து கடந்த பிப்ரவரி 27ந்தேதி பலி எண்ணிக்கை 22 ஆகவும், பின்னர் 26 ஆகவும் உயர்ந்தது. கொரோனா வைரசை ஒழிப்பதில் முன்னின்று பணியாற்றிய ஈரான் துணை சுகாதார மந்திரி இராஜ் ஹரீர்சி மற்றும் அந்நாட்டின் மகளிர் மற்றும் குடும்ப விவகாரங்களுக்கான துணை அதிபராக இருந்து வரும் மசவுமி இப்திகார் ஆகியோருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், ஈரானில் கொரோனா வைரசுக்கு நேற்று முன்தினம் 11 பேர் பலியான நிலையில் பலி எண்ணிக்கை 54 ஆக உயர்வடைந்தது. தொடர்ந்து நேற்று பலி எண்ணிக்கை 66 ஆக உயர்ந்திருந்தது. 1,501 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
இந்த நிலையில், ஈரானில் இந்த வைரஸ் பாதிப்புக்கு இன்று 11 பேர் பலியான நிலையில் பலி எண்ணிக்கை 77 ஆக உயர்வடைந்து உள்ளது. இதேபோன்று வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையும் உயர்ந்து 2,336 ஆக உள்ளது.
இதனை அந்நாட்டு சுகாதார அமைச்சகத்தின் அதிகாரி அலி ரெஜா ரெய்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.