5,000 கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற தலிபான்களின் கோரிக்கை நிராகரிப்பு!
02 Mar,2020
5,000 கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற தலிபான் கோரிக்கையை ஆப்கான் ஜனாதிபதி அஷ்ரப் கானி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நிராகரித்துள்ளார்.
அமெரிக்காவிற்கும் இஸ்லாமிய போராளிகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆப்கானிய அரசாங்கம் மற்றும் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான நிபந்தனையாக 5,000 கைதிகளை விடுவிக்க வேண்டும் என தலிபான் கோரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில் இன்று காபூலில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்த அவர், “ஆப்கானிஸ்தான் அரசாங்கம் 5,000 தலிபான் கைதிகளை விடுவிப்பதாக எந்த உறுதியும் வழங்கவில்லை” என அஷ்ரப் கானி தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ வேண்டி அமெரிக்காவுக்கும் தலிபான் தீவிரவாதிகளுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் டோகாவில் கைச்சாத்திடப்பட்டது.
மார்ச் 10 ஆம் தேதிக்குள் சிறையில் அடைக்கப்பட்ட 5,000 தலிபான்கள் 1,000 ஆப்கானிய அரசாங்க கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்படுவார்கள் என அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், கைதி இடமாற்று விவகாரத்தில் முடிவு செய்வது அமெரிக்காவின் அதிகாரத்தில் இல்லை என்றும் அவர்கள் ஒரு செயலாக்குனறாகவே இருக்கின்றனர் என்றும் ஆப்கான் ஜனாதிபதி அஷ்ரப் கானி குறிப்பிட்டுள்ளார்.