சிரியா போர்: 29 துருக்கி சிப்பாய்கள் உயிரிழப்பு
28 Feb,2020
வட மேற்கு சிரியாவில், "சிரியா அரசுப் படைகள்" நடத்திய வான் தாக்குதலில் குறைந்தது 29 துருக்கி சிப்பாய்கள் கொல்லப்பட்டதாக மூத்த துருக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த தாக்குதலில் இட்லிப் மாகணத்தில் பலர் காயமடைந்துள்ளர் என துருக்கியின் ஹெதே மாகாண ஆளுநர் ராமி டோகன் தெரிவித்துள்ளார்.
தற்போது சிரிய அரசுப் படைகள் இருக்கும் இடங்களை தாக்கு வைத்து துருக்கி பதில் தாக்குதல்கள் நடத்தி வருகிறது.
துருக்கி சிப்பாய்கள் ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்கள் பிடியிலிருந்து இட்லிப் நகரை திரும்ப பெற ரஷ்ய ஆதரவு சிரியப்படைகள் முயற்சி செய்து வருகின்றனர்.
இந்த சமீபத்திய பதற்றம் குறித்து சிரிய அதிகாரிகள் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இட்லிப் மாகணம்தான் எதிர்த்தரப்பினர் கையில் இருக்கும் கடைசி மாகாணம்.
இதுகுறித்து துருக்கி அதிபர் ரிசப் தாயிப் எர்துவான், அங்காராவில் உயர்நிலை பாதுகாப்பு கூட்டத்தை நடத்தினார்.
துருக்கி அரசின் ராணுவ கண்காணிப்பு தலங்கள் நிறுத்தப்பட்டுள்ள இடங்களிலிருந்து சிரிய அரசு படைகள் பின்வாங்க வேண்டும் என துருக்கி அதிபர் தெரிவித்திருந்தார். ஆனால் சிரியா மற்றும் ரஷ்யா இதனை மறுத்தது.
துருக்கி போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாக ரஷ்யா குற்றம் சுமத்தியுள்ளது.
டெல்லி வன்முறை - ஐநா மனித உரிமைகள் கவலை
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான போராட்டங்கள் மற்றும் டெல்லி வனமுறை குறித்து ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் ஆணையரான மிஷேல் பெஷலட் கவலை தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் நடைபெற்று வரும் மனித உரிமை பேரவையின் 43ஆவது கூட்டத் தொடரில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்நிலையில், டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிரானவர்கள் மற்றும் ஆதரவானவர்கள் இடையே உண்டான மோதலால் ஞாயிறன்று தொடங்கிய வன்முறைகளில் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.
ஜிடிபி என்றழைக்கப்படும் குரு தேஜ் பகதூர் மருத்துவமனையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 34-ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளதாகவும், லோக் நாயக் ஜெய்பிரகாஷ் நாராயண் (எல்என்ஜெபி) மருத்துவமனையில் மூன்று பேர் இறந்துள்ளனர் என்றும், ஜக் பர்வேஷ் சந்தர் மருத்துவமனையில் ஒருவர் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாஹிர் ஹுசேனை இடைநீக்கம் செய்த ஆம் ஆத்மி கட்சி
தாஹிர் ஹுசேன் (இடது) மற்றும் கொலை செய்யப்பட்ட அங்கித் சர்மா (வலது)
டெல்லி மதக் கலவரத்தில் இந்திய உளவுத் துறையில் பணியாற்றும் ஒருவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த தாஹிர் ஹுசேன் என்பவர் மீது கொலை மற்றும் வன்முறையில் தீவைத்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியில் இருந்து தாஹிர் ஹுசேன் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அந்தக் கட்சி அறிவித்துள்ளது.
தாஹிர் ஹுசேன் கிழக்கு டெல்லி மாநகராட்சி உறுப்பினராக உள்ளார்.
விரிவாக படிக்க:டெல்லி வன்முறை: உளவுத் துறை ஊழியர் கொலையால் வழக்கு; கவுன்சிலரை இடைநீக்கம் செய்த ஆம் ஆத்மி கட்சி
கொரோனாவிருந்து தப்பிக்க தாடியை தவிர்க்க வேண்டுமா?
கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால், ஆண்கள் முகத்தில் தாடி வளர்ப்பதை தவிர்க்க வேண்டும் என சமூக ஊடகங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
முகத்தில் முகமூடி அணிய ஏதுவாக எம்மாதிரியான தாடி வளர்த்தால் சரியாக இருக்கும் என அமெரிக்காவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையம் வெளியிட்டுள்ள படம் ஒன்றை குறிப்பிட்டு இந்த செய்தி பரவி வருகிறது.
ஆனால் இந்த படத்திற்கும் கொரோனா தொற்றுக்கும் எந்த தொடர்பும் இல்லை. 2017ஆம் ஆண்டு பணியிடங்களுக்கு முகமூடி அணிந்து செல்பவர்கள் குறித்தான வலைப்பூ ஒன்றில் இந்த படம் வெளியிடப்பட்டுள்ளது.
"அந்த வலைப்பூவில், முகமூடியின் சீல் பகுதியில் தாடியோ, கிர்தாவோ அல்லது மீசை முடியோ இருந்தால் முகமூடியின் செயல்பாட்டை அது குறைத்துவிடும்," என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வலைப்பூ வெளியான நேரம் ஒருபக்கம் இருந்தாலும், கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ள தற்போது அணியப்படும் பல முகமூடிகளில் இறுக்கமான சீல்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவின் புதிய பிரதமர் யார்?
மலேசியாவின் புதிய பிரதமர் யார் என்பதை தீர்மானிக்க அந்நாட்டு நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வு வரும் மார்ச் 2ம் தேதி கூட்டப்பட இருக்கிறது.
அன்றைய தினம் வாக்கெடுப்பின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பார்கள் என்றும், ஒருவேளை பெரும்பான்மை பலத்துடன் உள்ள புதிய பிரதமரை அடையாளம் காண முடியாத பட்சத்தில், மலேசிய மக்கள் மீண்டும் பொதுத்தேர்தலைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் இடைக்கால பிரதமர் மகாதீர் மொஹம்மத் அறிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக மலேசிய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. மகாதீர் மொஹம்மத் தலைமையிலான நம்பிக்கை கூட்டணியின் (பக்காத்தான் ஹராப்பான்) ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், ஆட்சிப் பொறுப்பேற்ற 2 ஆண்டுகளுக்குப் பின், பிரதமர் பொறுப்பை அன்வார் இப்ராகிமிடம் அவர் ஒப்படைக்க வேண்டும் எனக் கூட்டணியில் உள்ள கட்சிகள் வலியுறுத்தி வந்தன.