கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த 230 மில்லியன் யூரோ நிதி ஒதுக்கீடு!
27 Feb,2020
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியம் 230 மில்லியன் யூரோ நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக இத்தாலியில் கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவுவதுடன், 300 இற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், போக்குவரத்து, வர்த்தகம் ஆகியவற்றுக்கு ஐரோப்பிய ஒன்றியம் இதுவரை எந்தத் தடையும் விதிக்கவில்லை.
இந்தநிலையிலேயே ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் 230 மில்லியன் யூரோ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் இத்தாலி, அல்ஜீரியா மற்றும் வட ஆபிரிக்காவுக்குச் சென்று நாடு திரும்பிய ஆஸ்திரிய, குரோசிய மற்றும் சுவிஸினைச் சேர்ந்தவர்கள் வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் கொரோனா வைரஸினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி பதிவாகியுள்ளது.
இத்தாலியில் கடந்த 3 நாட்களுக்குள் வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளதுடன் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 300 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக 37 நாடுகளைச் சேர்ந்த 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் இதுவரையில் இரண்டாயிரத்து 715 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் மாத்திரம் தற்போது, 78 ஆயிரத்து 64 பேர் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த இரண்டு நாட்களில் மாத்திரம் சீனாவில் புதிதாக 500 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 70 பேர் உயிரிழந்துள்ளனர்.
27323 பேர் குணமடைந்து, மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது