ஆசியாவின் உண்மையான நோயாளி சீனா என செய்தி வெளியிட்ட பத்திரிக்கையாளர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்
26 Feb,2020
சீனாவில் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் நாடு முழுவதிலும் பரவி, பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியா, ஈரான், இத்தாலி, மலேசியா, இந்தியா என உலகின் 25க்கும் அதிகமான நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.
இந்த வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் பலியானோரின் எண்ணிக்கை 2,663 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 77 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு சீனாவில் செயல்பட்டுவரும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கை தனது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக சிறப்பு கட்டுரை ஒன்றை கடந்த 3-ம் தேதி வெளியிட்டது.
‘ஆசியாவின் உண்மையான நோயாளி சீனா’ என்ற தலைப்பில் வெளியான அந்த சிறப்பு செய்தியில் கொரோனா வைரஸ் குறித்து தொடக்கத்தில் சீனா சரிவர செயல்படவில்லை என விமர்சித்து எழுதப்பட்டிருந்தது.
இதனால், சீனா குறித்து தவறான கருத்துக்களை தெரிவித்ததாகவும், நாட்டின் இறையான்மைக்கு எதிராக செயல்பட்டதாகவும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மீது குற்றச்சாட்டப்பட்டது.
இந்த கட்டுரை அமெரிக்காவை சேர்ந்த ஆசிரியர் வால்டர் ருசல் மேட் என்ற ஆசிரியர் எழுதியிருந்தார்.
இந்த கட்டுரையால் ஆத்திரமடைந்த சீன அரசு கட்டுரையை வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் வெளியிட்ட அதன் துணை தலைமை செய்தி ஆசிரியரான அமெரிக்காவை சேர்ந்த ஜோஷ் சின், செய்தி சேகரிப்பாளர் சோ டேங்க் மற்றும் அதே பத்திரிக்கையில் பணிபுரியும் ஆஸ்திரிலியாவை சேர்ந்த மற்றொரு செய்தி சேகரிப்பாளர் பிலிப் வெங் ஆகியோர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் எனவும் சீன அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில், வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் துணை தலைமை செய்தி ஆசிரியர் ஜோஷ் சின் செய்தி சேகரிப்பாளர் சோ டேங்க் கடந்த திங்கள்கிழமை சீனாவில் இருந்து விமானம் மூலம் தங்கள் சொந்த நாட்டிற்கு திரும்பிச்சென்றனர்.
ஆனால், ஆஸ்திரிலியாவை சேர்ந்த செய்தி சேகரிப்பளர் பிலிப் வெங் மட்டும் இன்னும் கொரோனா அதிகம் பரவியுள்ள வுகான் நகரில் தான் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கையாளர்கள் சீனாவை விட்டு வெளியேற்றப்பட்டதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும், தங்கள் நாட்டில் செயல்பட்டுவரும் சீன பத்திரிக்கைகள், செய்திநிறுவனங்களுக்கு அமெரிக்கா கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.