கொரோனா அச்சுறுத்தல் : ஈரான் எல்லையை மூடியது பாகிஸ்தான்!
25 Feb,2020
கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக ஈரானுடனான எல்லையை பாகிஸ்தான் அரசாங்கம் தற்காலிகமாக மூடியுள்ளதுடன், சுகாதார அவசர நிலையை அறிவித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சீனாவில் 2 ஆயிரத்து 592 பேர் உயிரிழந்துள்ளனர். 77 ஆயிரத்து 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், கொரோனா வைரஸ் நோய் தாக்கம் காரணமாக ஈரானில் இதுவரை 8 பேர் உயிரிழந்தனர். 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் கொரோனா வைரஸ் பரவும் என்ற அச்சம் காரணமாக பாகிஸ்தான் தனது எல்லைப் பாதையை தற்காலிகமாக மூடியுள்ளது.
ஈரானில் இருந்து வரும் அனைத்து மக்களும் எல்லைப் பகுதியில் நியமிக்கப்பட்டுள்ள மருத்துவக் குழுக்களால் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள பலுசிஸ்தான் மாகாண உள்துறை அமைச்சர் மிர் சியாவுல்லா லாங்கோவ், ‘நாங்கள் ஈரான் எல்லையை மூடிவிட்டோம். கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பலுசிஸ்தானின் மாகாண அரசாங்கம், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்.டி.எம்.ஏ) எல்லை நகரமான டஃப்டானில் 100 படுக்கைகள் கொண்ட கூடார மருத்துவமனையை அமைத்துள்ளது.
ஈரானில் இருந்து வரும் அனைத்து மக்களும் எல்லைப் பகுதியில் நியமிக்கப்பட்டுள்ள மருத்துவக் குழுக்களால் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான ஷியைட் பாகிஸ்தானியர்கள் ஈரானுக்கு பல்வேறு மதத் தளங்களைப் பார்வையிடப் பயணம் செய்கிறார்கள்.
பாகிஸ்தானில் இருந்து ஈரானுக்கு பலுசிஸ்தான் சாலை வழியாக யாத்ரீகர்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பலுசிஸ்தானின் மாவட்டங்கள் சாகி, பஞ்ச்கூர், கெச், குவாடர் உள்ளிட்டவை ஈரானின் எல்லையில் உள்ளன. இருப்பினும், சட்டப்பூர்வ போக்குவரத்தின் பெரும்பகுதி சாகியில் உள்ள தஃப்தான் வழியாக வருகிறது. எனவே அப்பகுதி இன்றிலிருந்து மூடப்படுகிறது’ எனத் தெரிவித்துள்ளார்