தாடி வளர்த்தால், பர்தா அணிந்தால் கைதா?
22 Feb,2020
சீனாவில் கட்டுப்பாடு நிறைந்த முகாம்களில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை கையாள கடைப்பிடிக்கப்படும் கொள்கைகள் தொடர்பான ஆவணங்களை பிபிசி பார்வையிட்டுள்ளது.
அதில், முக்காடு அணிவது, நீளமாக தாடி வைப்பது போன்ற காரணங்களுக்காக, வீகர் இனக்குழுவினரை தடுத்து வைக்க பரிசீலிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.
அங்குள்ள ஷின்ஜியாங் மாகாணத்தை சேர்ந்த மக்கள் எவ்வாறு ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை, அந்த ஆதாரங்கள் தெளிவாக வெளிப்படுத்துவதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.
மேற்கு சீனாவில் செயல்படும் கட்டாய முகாம்கள் குறித்து இரண்டு ஆண்டுகளாக பிபிசி செய்தி வெளியிட்டு வருகிறது. அங்கு சுமார் பத்து லட்சம் வீகர் இனக்குழுவினரும், பிற முஸ்லிம் சிறுபான்மையினரும் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சீனா கூறுவது என்ன?
தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சியின் ஓர் அங்கமாக, இங்கு சீன மொழியையும், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்பாட்டையும் வீகர்கள் கற்கிறார்கள் என்று சீனா கூறுகிறது.
ஆனால் பிபிசி பார்க்க நேர்ந்த கசிந்த ஓர் ஆவணம், மத நடைமுறைகள் மீதான விரிவான ஒடுக்குமுறை இந்த முகாம்களில் நடைபெறுவதை காண்பித்தன.
விரிவாக தொகுக்கப்பட்ட 137 பக்கங்களில், சின்ஜியாங் மாகாணத்தில் ஒரே பகுதியை சேர்ந்த 300க்கும் அதிகமான வீகர் இனக்குழுவினர், ஏன் தடுத்து வைக்கப்பட பரிசீலிக்கப்பட்டார்கள் என்பது விளக்கப்பட்டுள்ளது.
அவர்களை கீழ்கண்ட காரணங்களால் தடுத்து வைக்க முடிவு செய்யப்பட்டது தெரிய வருகிறது. அந்த ஆவணத்தில் கீழ்கண்டபடி குறிப்பிடப்பட்டுள்ளது.
சிலர் "கடவுச்சீட்டு கோரி விண்ணப்பித்தார்கள்", வேறு சிலருக்கு, "வெளிநாட்டில் உறவினர்கள் இருந்தார்கள்" அல்லது இணையத்தில் "தற்செயலாக வெளிநாட்டு வலைதளத்தில் அவர்கள் தகவல்களை தேடினார்கள்" அல்லது நீளமாக தாடி வைத்திருந்தார்கள் அல்லது "முக்காடு அணியும் வழக்கத்தை கொண்டிருந்தனர்" அல்லது "சிறுபான்மை மதத்தால் பாதிக்கப்பட்டிருந்தனர்" என்று அந்த பக்கங்களில் கூறப்பட்டிருந்தது. வேறு சிலருக்கோ, பிறப்புக்கட்டுப்பாடு கொள்கைகளை மீறியது தெரிய வந்ததாலும், நம்ப முடியாதவராக விளங்கியதாலும் தடுத்து வைக்கப்பட பரிசீலிக்கப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டிருந்தது. இந்த ஆவணம் இடைத்தரகர்கள் மூலம் ஆம்ஸ்டர்டாமில் வசிக்கும் நாடு கடத்தப்பட்ட வீகர் இனத்தை சேர்ந்த ஆசியே அப்துல்ஹேபுக்கு அனுப்பி வைக்கப்பட்டது, அவர் அதை வெளியிட முடிவு செய்தார்.
இது பற்றி கூறுகையில், "எனது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பாதுகாப்பு குறித்து நான் கவலைப்படுகிறேன். ஆனால் எல்லோரும் தங்களின் குடும்பத்தினரை பாதுகாக்க விரும்பி அமைதி காத்தால், இதுபோன்ற குற்றங்களை எப்போதுமே நம்மால் தடுக்க முடியாமல் போய்விடும்" என்கிறார்.
ஆவணத்தில் பதிவான வீகர் இனத்தவரின் பழக்கங்கள்
இந்த ஆவணத்தில் வீகர் இனத்தவரின் அந்தரங்க மற்றும் மத வாழ்க்கை முறை, அவர்கள் எப்படி சாப்பிடுவார்கள், எப்படி ஆடை அணிவார்கள், எப்போது தொழுகையில் ஈடுபடுவார்கள் அல்லது மசூதிக்கு செல்வார்கள் மற்றும் குற்றவாளியாக கருதப்படும் சுமார் மூன்றாயிரம் குடும்பங்கள், நண்பர்கள், அண்டை வீட்டாரின் விவரங்கள் பதிவாகியுள்ளன.
இந்த ஆவணத்தை நூறு சதவீதம் சரிபார்ப்பது கடினம் என்றாலும், அதை பார்த்த நிபுணர்கள், அதில் உண்மை இருப்பதாக நம்புகின்றனர்.
இந்த ஆவணத்தை பார்த்த டாக்டர் அட்ரியன் ஸென்ஸ் கருத்து தெரிவிக்கையில், 'ஒட்டுமொத்த பிரசாரமும் அதன் பின்னணியில் உள்ள பகுத்தறிவும் மிகவும் விரிவான மற்றும் முற்றிலும் நிலையான உலகின் பார்வையை வெளிப்படுத்துகிறது. எந்தவொரு மதத்தின் மீதும் மிகவும் அச்சம் ஏற்படுத்தக்கூடிய மத்தியகால நம்ப முடியாத சித்தாந்தத்தை நாமும் விரும்பக்கூடியதாக இருக்கலாம்.''
கடந்த ஆண்டு, வெறும் தொழிற்பயிற்சி மையங்களாக இதுபோன்ற முகாம்கள் இருப்பதாகக் காட்டிக் கொள்ள கேமராக்களை இங்கு சீனா அனுமதித்தது.
அதில் இருப்பவர்கள், தீவிரவாத அல்லது மதத்தீவிரவாதம் தொடர்புடைய சட்டவிரோத அல்லது குற்றச்செயல்களில் தண்டிக்கப்பட்டவர்கள் மட்டுமே என்று லண்டனில் உள்ள சீன தூதரகம் ஓர் அறிக்கை வாயிலாக தெரிவித்தது.
எந்தவொரு மதமோ இனவாத குழுவோ இலக்கு வைக்கப்படுவதாக கூறப்படுவதையும் சீனா மறுத்தது.