சீன ஊடகங்கள் மீது புதிய விதிமுறைகளை அமுல்படுத்துகின்றது அமெரிக்கா!
20 Feb,2020
சீன ஊடகங்கள் மீது அமெரிக்கா புதிய விதிமுறைகளை அமுல்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் இயங்கும் 5 சீன ஊடகங்களுக்கே இந்தப் புதிய விதிமுறைகள் அமுலாகவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த 5 சீன ஊடகங்களும் சீன அரசினால் நடத்திச் செல்லப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய குறித்த சீன ஊடக அமைப்புகள், தமது சொத்துக்கள் மற்றும் ஊழியர்கள் குறித்த விபரங்களை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவை விமர்சித்த அமெரிக்க ஊடகவியலாளர்களை வெளியேறுமாறு உத்தரவு
சீனாவை ‘ஆசியாவின் நோய்’ என்று அமெரிக்காவின் வோல் ஸ்ட்ரீற் (Wall Street) என்ற பத்திரிகையின் செய்தி வெளியிட்டுள்ளமை தொடர்பாக அந்தப் பத்திரிகையின் ஊடகவியலாளர்கள் மூவரை சீனாவை விட்டு வெளியேறுமாறு சீன அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
“China is the Real Sick Man of Asia” என்ற அந்தத் தலையங்கத்தை சீனாவின் வெளியுறவு அமைச்சகம், ‘நிறவெறி’ தன்மை கொண்டதாகவும் ஒரு குறிப்பிட்ட நாட்டை பாகுபடுத்திப் பிரிப்பதாகவும் குற்றஞ்சாட்டியது.
அத்துடன், அமெரிக்காவில் சீன அரச ஊடகங்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளையும் சுட்டிக் காட்டி அமெரிக்காவை சீனா விமர்சித்துள்ளது.
இதேவேளை, வோல் ஸ்ட்ரீற் ஜேர்னல் பத்திரிகை குறித்த தலையங்கம் தொடர்பாக இதுவரை மன்னிப்புக் கேட்கவில்லை என்று சாடியுள்ள சீன வெளியுறவு அமைச்சகம், குறித்த மூன்று ஊடகவியலாளர்களின் ஊடகவியலாளர் அனுமதி அட்டை இனி செல்லாது என்றும் அறிவித்துள்ளதுடன் அவர்கள் சீனாவை விட்டு வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
குறித்த மூவரில், ஜோஷ் சின், சாவோ டெங் ஆகிய இரண்டு ஊடகவியலாளர்களும் அமெரிக்க குடியுரிமை உடையவர்கள் என்பதுடன் மற்றையவர் அவுஸ்ரேலியரான பிலிப் வென் என்பவராவார்.
இவர்கள் மூவரும் 5 நாட்களில் சீனாவிலிருந்து வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
சீனாவில் கொரோனா வைரஸால் உயிரிழப்பு 2 ஆயிரத்தைக் கடந்துவிட்ட சூழ்நிலையில், சீன அரசாங்கத்தின் செயற்பாடுகளை அமெரிக்கப் பத்திரிகைகள் கடுமையாக விமர்சித்து வருவதும் இந்த நடவடிக்கையின் பின்புலமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன