தொடர்ந்து 4-வது முறையாக செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் முயற்சியில் ஈரான் தோல்வி
11 Feb,2020
ஈரான், மற்ற உலக நாடுகளுக்கு இணையாக விண்வெளி திட்டத்தில் சாதிக்க வேண்டுமென தீவிர முனைப்பு காட்டி வருகிறது. ஆனால் அந்த நாடு விண்வெளி திட்டத்தை ஒரு மறைவாக பயன்படுத்தி அணுஆயுதங்களை தயாரிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. மேலும் இந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதித்து வருகிறது.
இந்த பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும் ஈரான் தனது விண்வெளி திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. ஆனாலும் விண்வெளி திட்டத்தில் ஈரான் தொடர்ந்து தோல்விகளைதான் சந்தித்து வருகிறது.
இந்த நிலையில் ‘ஸாபர்’ என்று பெயரிடப்பட்ட புதிய செயற்கைக்கோள் ஒன்றை சிர்மோர்க் ராக்கெட் மூலம் ஈரான் நேற்று முன்தினம் மாலை விண்ணில் செலுத்தியது. ஆனால் அந்த செயற்கைக்கோள் சுற்றுவட்டப்பாதையில் நுழையமுடியாமல் போனது. இதனால் இந்த திட்டம் தோல்வியில் முடிந்தது.
இது குறித்து ஈரான் ராணுவ அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது. நாம் நமது இலக்குகளை கிட்டத்தட்ட நெருங்கிவிட்டோம். ஆனால் ‘ஸாபர்' திட்டமிட்டபடி சுற்றுப்பாதையை அடையவில்லை” என கூறினார்.
இதன் மூலம் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் முயற்சியில் ஈரான் தொடர்ந்து 4 முறை தோல்வியை சந்தித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மற்றும் ஆகஸ்டு மாதங்களில் நடந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் முயற்சிகள் தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.