ஜப்பான் கப்பலில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு
07 Feb,2020
ஜப்பானில் இருந்து ஹாங்காங் சென்று மீண்டும் ஜப்பான் திரும்பிய டைமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பலில் பயணம் செய்த 80 வயது முதியவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது அண்மையில் தெரியவந்தது.
அந்த முதியவர் தற்போது கப்பலில் இல்லை என்ற போதிலும் அவருடன் பயணித்த சக பயணிகளுக்கு ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்று பரவியிருக்கலாம் என்ற அச்சம் எழுந்ததால் அந்த கப்பல் நடுக்கடலில் நிறுத்தப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் அந்த கப்பலில் இருக்கும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது நேற்று முன்தினம் தெரியவந்தது. அதனை தொடர்ந்து அவர்கள் 10 பேரும் உடனடியாக கப்பலில் இருந்து வெளியேற்றப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, கப்பலில் உள்ள 3,701 பேரும் 2 வாரங்கள் கப்பலிலேயே தங்கியிருக்க வேண்டுமென ஜப்பான் சுகாதாரத்துறை தெரிவித்தது.இந்த நிலையில் டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருக்கும் மேலும் 10 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர்களுக்கு வைரஸ் தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, உடனடியாக அவர்கள் கனகவா பிராந்தியத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் தனித்தனி வார்டுகளில் வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன் மூலம் ஜப்பானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.